ஏ.டி.எம். மையத்தில் பெண்ணிடம் ரூ.30 ஆயிரம் அபேஸ்


ஏ.டி.எம். மையத்தில் பெண்ணிடம் ரூ.30 ஆயிரம் அபேஸ்
x
தினத்தந்தி 11 Sept 2018 3:15 AM IST (Updated: 10 Sept 2018 11:13 PM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம் அருகே ஏ.டி.எம். மையத்துக்கு வந்த பெண்ணிடம் ரகசிய எண்ணை பெற்று, கார்டை மாற்றி கொடுத்து ரூ.30 ஆயிரத்தை அபேஸ் செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சங்கராபுரம், 


சங்கராபுரம் அருகே உள்ள சிவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வேடியப்பன் மனைவி மீனா (வயது 55). நேற்று இவர் தனது ஏ.டி.எம். கார்டில் இருந்து பணம் எடுப்பதற்காக சங்கராபுரத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியின் ஏ.டி.எம். மையத்துக்கு சென்றார். மீனாவுக்கு ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணம் எடுக்க தெரியாததால், அங்கு நின்று கொண்டிருந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபரிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்து பணம் எடுத்து தருமாறு கூறினார்.

கார்டை பெற்றுக்கொண்ட அந்த வாலிபரிடம் மீனா ரகசிய எண்ணை தெரிவித்தார். பின்னர் அந்த வாலிபர் ஏ.டி.எம். எந்திரத்தில் கார்டை செலுத்தி விட்டு, உங்கள் கணக்கில் பணம் இல்லை என்று கூறினார். இதையடுத்து மீனா அந்த வாலிபரிடம் இருந்து ஏ.டி.எம். கார்டை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார்.

சிறிது தூரம் வந்ததும் மீனா தனது கையில் இருந்த கார்டை பார்த்தார். அப்போது அது தனக்குரிய ஏ.டி.எம். கார்டு இல்லை என்பது தெரியவந்தது. உடனே அவர் வங்கிக்கு சென்று தனது கணக்கில் உள்ள இருப்பு தொகை குறித்த விவரத்தை கேட்டார். அப்போது தனது கணக்கில் இருந்த 30 ஆயிரத்து 400 ரூபாய் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

ஏ.டி.எம். மையத்தில் நின்ற வாலிபர் தன்னிடம் கார்டை மாற்றிக்கொடுத்து விட்டு, தனது ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.30 ஆயிரத்து 400 அபேஸ் செய்து சென்றிருப்பது மீனாவுக்கு அப்போது தான் தெரியவந்தது. இதுகுறித்து மீனா சங்கராபுரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story