பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Sept 2018 4:30 AM IST (Updated: 11 Sept 2018 12:20 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து கோவையில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை,

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ‘பாரத் பந்த்’ நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இதற்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

இதையொட்டி காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி கட்சியினர் கோவை காந்திபுரம் மத்திய பஸ் நிலையம் அருகில் நஞ்சப்பா சாலையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தின. ஆர்ப்பாட்டத்துக்கு கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமை தாங்கி பேசியதாவது:-

மத்தியில் ஆளும் நரேந்திரமோடி தை-மையிலான பாரதீய ஜனதா அரசு இதுவரை இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி உள்ளது. பெட்ரோல் ரூ.84 ஆகவும், டீசல் ரூ.76 ஆகவும் உள்ளது. இது அடித்தட்டு மக்களை மிகவும் பாதித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் விலைவாசி கடுமையாக உயர்ந்து இருக்கிறது. இந்த விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இல்லையென்றால் அனைத்து தரப்பு மக்களையும் திரட்டி தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். மேலும் வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அரசுக்கு பின்னடைவு ஏற்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாநகர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, மாநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி. இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் சுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமுகம், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் இலக்கியன் மற்றும் பல்வேறு கட்சியினர் தங்கள் கட்சி கொடிகளுடன் கலந்து கொண்டனர். அவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதில் அகில இந்திய காங்கிரஸ் கவுன்சில் உறுப்பினர் பி.எஸ்.சரவணக்குமார், மாநில செயலாளர் வீனஸ்மணி, கணபதி சிவக்குமார், சவுந்திரகுமார், ராம்கி, வக்கீல் கருப்பசாமி, கோவை போஸ், துளசிராஜ், சாய் சாதிக், தி.மு.க. பொறுப்புக்குழு உறுப்பினர் நாச்சிமுத்து, நந்தகுமார், மதன், மற்றும் ஆடிட்டர் அர்ஜூன்ராஜ், ஆர்.சேதுபதி, லூயிஸ் (ம.தி.மு.க.), கருப்பசாமி, தனபால், வடிவேல் (கொ.ம.தே.க.), அதியமான் (ஆதி தமிழர் பேரவை), பஷீர் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) மற்றும் எஸ்.டி.பி.ஐ, மனித நேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனித நேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story