பெண்ணை தாக்கி தங்க சங்கிலி பறிப்பு


பெண்ணை தாக்கி தங்க சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 11 Sept 2018 3:15 AM IST (Updated: 11 Sept 2018 12:25 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே பெண்ணை தாக்கி தங்க சங்கிலியை பறித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

உளுந்தூர்பேட்டை, 


உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி, தொழிலாளி. இவரது மனைவி தனம் (வயது 40). நேற்று முன்தினம் இரவு தனம் சாப்பிட்டு முடித்ததும் தனது குடும்பத்தினருடன் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு தூங்கியதாக தெரிகிறது.

இந்த நிலையில் நள்ளிரவு நேரத்தில் மர்மநபர்கள் 2 பேர் அவரது வீட்டுக்குள் புகுந்தனர். பின்னர் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த தனத்தின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். இதில் திடுக்கிட்டு எழுந்த தனம் தங்க சங்கிலியை இறுக பிடித்துக் கொண்டு திருடன் திருடன் என கூச்சலிட்டார்.

அப்போது அவர்கள் 2 பேரும் தனத்தை தாக்கி, அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடினர். இதற்கிடையே தனத்தின் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் மர்மநபர்கள் 2 பேரையும் விரட்டி பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அவர்கள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டனர்.

பறிபோன நகையின் மதிப்பு ரூ.80 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தனம் எடைக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் பெண்ணை தாக்கி மர்மநபர்கள் நகையை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story