பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைப்பு
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்கட்சிகள் நடத்திய முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் நேற்று அடைக்கப்பட்டிருந்தன. அரசு பஸ்கள் வழக்கம் போல ஓடின.
கடலூர்,
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு அனைத்து எதிர்கட்சிகள், தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன.
கடலூர் மாவட்டத்திலும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. மாவட்டத்தின் தலைநகரான கடலூரில் முக்கிய வணிக வீதியான லாரன்ஸ் சாலையில் நகை, ஜவுளி, பாத்திரக்கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் அந்த பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
அதேபோல் கடலூர் முது நகர், மஞ்சக்குப்பம், செம்மண்டலம், புதுப்பாளையம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளிலும் கடைகள், காய்கறி மார்க்கெட்டுகள், மீன் மார்க்கெட்டுகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஆனால் மருந்து கடைகள், ஒரு சில ஓட்டல்கள் மற்றும் பெட்டி கடைகள் திறந்து இருப்பதை பார்க்க முடிந்தது. பெரும்பாலான ஓட்டல்கள் மூடப்பட்டு இருந்ததால் கடலூரில் தங்கி பணிபுரியும் நபர்கள் சாப்பிட முடியாமல் அவதிப்பட்டனர். இதனால் திறந்து இருந்த ஒரு சில ஓட்டல்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியதை காண முடிந்தது. மேலும் சிலர் தள்ளுவண்டிகளில் வைத்தும், சாலையோரங்களில் சாப்பாட்டு பொட்டலங்களை வைத்தும் விற்பனை செய்தனர்.
சுபமுகூர்த்தம் மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட மாவட்டத்தின் சில பகுதிகளில் குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு கடைகள் திறக்கப்பட்டன. கடைகள் ஓரளவு அடைக்கப்பட்டு இருந்தாலும் அரசு பஸ்கள் முழுமையாக இயக்கப்பட்டன. பண்ருட்டியில் 90 சதவீத கடைகள் திறந்து இருந்தன.
விருத்தாசலம் ஜங்ஷன், பஸ்நிலையம், பெரியார் நகர், திரு.வி.க. நகர் மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆட்டோக்கள் ஓடவில்லை. ஒரு சில தனியார் பஸ்கள் மட்டுமே ஓடின. விருத்தாசலம் ஜங்ஷன் சாலை, கடைவீதி, கடலூர் சாலை, பெரியார் நகர் உள்ளிட்ட அனைத்து முக்கிய வீதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதேபோல் திட்டக்குடி, பெண்ணாடம், பி.முட்லூர், வடலூர், குறிஞ்சிப்பாடி, மந்தாரக்குப்பம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி, லால்பேட்டை ஆகிய பகுதிகளில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சிதம்பரத்தில் பெரும்பாலான கடைகள் திறந்திருந்தன. மேலும் அரசு பஸ்களும் வழக்கம்போல் ஓடின.
மாவட்டத்தில் தனியார் பஸ்கள் குறைந்த அளவில் இயக்கப்பட்டன. புதுச்சேரியில் நேற்று காலை பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவம் நடந்ததால் கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை.
கடலூர் பஸ்நிலையத்துக்கு அதிகாலையில் இருந்தே உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து அரசு மற்றும் அரசு விரைவு பஸ்கள் வந்து சென்றன. மேலும் கடலூரில் இருந்து விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் வழியாக சென்னைக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. முழு அடைப்பு போராட்டத்துக்கு வேன் மற்றும் ஆட்டோ உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் நேற்று காலாண்டு தேர்வு தொடங்கியதால் மாணவர்கள் நலன் கருதியும், பெற்றோர்களின் வீண் சிரமத்தை தவிர்க்கும் வகையிலும் சில வேன் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் வாகனங்களை இயக்கினர்.
அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்கள், அரசு அலுவலகங்கள் வழக்கம்போல செயல்பட்டன. அதேபோல கடலூர் வழியாக இயக்கப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரெயில்கள் அனைத்தும் ஓடின.
சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் கூடும் பஸ் மற்றும் ரெயில் நிலையங்கள், முக்கிய சந்திப்புகள், அரசு போக்குவரத்து கழக பணிமனைகள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ரோந்து வாகனங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story