ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் இயங்கிய அரசு மணல் குவாரியில் அதிகாரிகள் குழு ஆய்வு
ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் இயங்கி வந்த அரசு மணல் குவாரியை சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது.
ஊத்துக்கோட்டை,
ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் கடந்த ஜூன் 1–ந் தேதி தமிழக அரசு மணல் குவாரி தொடங்கியது. 18 ஆயிரத்து 74 லாரிகள், மணல் அள்ள உத்தரவு வழங்கியது. அதன்படி இயங்கி வந்த குவாரியில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளியதால் நிலத்தடிநீர் மட்டம் குறைந்து, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாவும் ஊத்துக்கோட்டையை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் சிலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஆகஸ்டு 21–ந் தேதி மணல் குவாரியை தற்காலிகமாக மூட உத்தரவு பிறப்பித்தது. மேலும் அரசு உத்தரவை மீறி மணல் அள்ளப்பட்டதா? என்று ஆய்வு செய்ய மணல் குவாரிகள் திட்ட இயக்குனர் அருண்தம்பிராஜ் தலைமையில் அதிகாரிகள் மோகன், தளபதி சுப்பிரமணி, புகழேந்தி ஆகியோர் கொண்ட குழுவை ஐகோர்ட்டு நியமித்தது.
அதிகாரிகள் குழு ஆய்வு
இந்தநிலையில் அதிகாரிகள் குழு, நேற்று ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் இயங்கி வந்த மணல் குவாரியை ஆய்வு செய்தது. தாசில்தார் இளங்கோவன், இன்ஸ்பெக்டர் பாலு, சப்–இன்ஸ்பெக்டர்கள் வேலு, கணேசன், பொதுப்பணித்துறை அதிகாரிகள், உயர்மட்ட குழுவினர் உடன் இருந்தனர்.
இந்த குழுவினர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ள அறிக்கையை பொறுத்து, ஆரணி ஆற்றில் மணல் குவாரி மீண்டும் தொடங்கப்படுமா? அல்லது நிரந்தரமாக மூடப்படுமா? என்பது தெரியவரும்.
Related Tags :
Next Story