சேதமடைந்த நீரேற்று நிலைய குடிநீர் குழாய்களை சீரமைக்க வேண்டும்


சேதமடைந்த நீரேற்று நிலைய குடிநீர் குழாய்களை சீரமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 11 Sept 2018 3:45 AM IST (Updated: 11 Sept 2018 1:35 AM IST)
t-max-icont-min-icon

காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளபெருக்கில் சேதமடைந்த நீரேற்று நிலைய குடிநீர் குழாய்களை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து நேரடியாக மனுக்களை பெற்றார். இதில் மொத்தம் 217 மனுக்கள் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு தெரியப்படுத்துமாறு அரசு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில் கரூர் நகராட்சிக்கு உட்பட்ட சணப்பிரட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து கொடுத்த மனுவில், கட்டளை காவிரி ஆற்றில் நீரேற்று நிலையத்திலிருந்து குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டுவரப்பட்டு எங்களது பகுதிக்கு வினியோகிக்கப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் காவிரியில் ஏற்பட்ட வெள்ளபெருக்கில் அந்த குடிநீர் வினியோக குழாய்கள் சேதமடைந்தன. இதனால் எங்கள் பகுதிக்கு கடந்த சில மாதங்களாக குடிநீர் வினியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் குடிநீருக்காக மக்கள் பல்வேறு இடங்களுக்கு அலைந்து திரிகின்றனர். எனவே இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு, சேதமடைந்த நீரேற்று நிலைய குடிநீர் குழாய்கள் உள்ளிட்டவற்றை சீரமைத்து குடிநீர் சீராக வினியோகம் செய்ய வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பொதுமக்களை திரட்டி காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்து இருந்தனர்.

இதேபோல், கடவூர் தாலுகா வீரியப்பட்டியை சேர்ந்த கிராம மக்கள் திரண்டு வந்து கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் ஆழ்துளை கிணற்றுடன் கூடிய குடிநீர் தொட்டிகள் உள்ளிட்டவை சேதமடைந்திருப்பதால் சைக்கிள் உள்ளிட்டவற்றில் அருகேயுள்ள காணியாளம்பட்டி, புதூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று குடிநீர் பிடித்து வர வேண்டியுள்ளது. காவிரி குடிநீரும் தெருகுழாய்களில் சரிவர வினியோகம் செய்யப்படவில்லை. எனவே குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

கரூர் அருகே பசுபதிபாளையம் வடக்குதெருவை சேர்ந்த இளைஞர்கள் கொடுத்த மனுவில், கரூர்- திருச்சி மாநில நெடுஞ்சாலையில் பசுபதிபாளையம் ரெயில்வே கேட் பகுதியில் அடிக்கடி விபத்து நடப்பது வாடிக்கையாகி வருகிறது. எனவே இதனை தடுக்கும் பொருட்டு அங்கு வேகத்தடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசாரை கண்காணிப்பு பணியில் ஈடுபட செய்து அதிவேகமாக செல்வது உள்ளிட்ட சாலை விதிகளை மீறிய வாகன ஓட்டிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தனர்.

கடவூர் தாலுகா வடவம்பாடியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் குண்டும்- குழியுமாக உள்ள சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். பள்ளி குழந்தைகள் உள்ளிட்டோர் சைக்கிளில் பள்ளி கூடத்திற்கு செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே புதிதாக சாலை அமைத்து தர அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று கூறியிருந்தனர்.

கருப்பம்பாளையம் பாசன விவசாயிகள் சங்கத்தினர் கொடுத்த மனுவில், கருப்பம்பாளையம் திருமாநிலையூரான் ராஜவாய்க்காலில் இருந்து பெரிய கால்வாய் பிரிந்து செல்கிறது. இதன் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு கடைமடை பகுதிக்கு சென்றால் 50 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். எனவே இந்த கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், மாவட்ட ஆதி திராவிடர் நல அதிகாரி ஜெ.பாலசுப்பிரமணியம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அதிகாரி குமரேசன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரி ஜான்சி மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story