முழு அடைப்புக்கு ஆதரவாக மாவட்டத்தில் 80 சதவீத லாரிகள் ஓடவில்லை


முழு அடைப்புக்கு ஆதரவாக மாவட்டத்தில் 80 சதவீத லாரிகள் ஓடவில்லை
x
தினத்தந்தி 11 Sept 2018 3:30 AM IST (Updated: 11 Sept 2018 1:39 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில், முழு அடைப்புக்கு ஆதரவாக 80 சதவீத லாரிகள் ஓடவில்லை. இருப்பினும், பஸ், ஆட்டோக்கள் வழக்கம்போல இயங்கின.

திண்டுக்கல், 


பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் நேற்று முழு அடைப்பு மற்றும் வேலை நிறுத்தத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு, தமிழகத்தில் தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன. இருப்பினும், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் இருந்தும் நேற்று அதிகாலை முதலே பஸ்கள் இயக்கப்பட்டன.

இதேபோல, தனியார் பஸ்களும் வழக்கம் போல இயங்கின. திண்டுக்கல் பஸ்நிலையத்தில் ஒரு சில பெரிய ஓட்டல்கள் மட்டும் அடைக்கப்பட்டிருந்தன. மற்றபடி பெரும்பாலான கடைகள் வழக்கம் போல திறந்திருந்தன. பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் செயல்பட்டதால் பெரும்பாலான ஆட்டோக்கள் இயக்கப்பட்டன.
சில கம்யூனிஸ்டு சங்கங்களை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் மட்டும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். இதேபோல, லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் சங்கத்தினரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான லாரிகள் ஓடவில்லை. இவை அனைத்தும் திண்டுக்கல்-பழனி சாலை, மதுரை சாலைகளில் உள்ள பல்வேறு லாரி செட்களில் நிறுத்தப்பட்டன.

இதுகுறித்து, லாரி உரிமையாளர்கள் சங்க மாவட்ட தலைவர் எல்லப்பனிடம் கேட்டபோது, ‘மாவட்டம் முழுவதும் 4 ஆயிரத்து 500 லாரிகள் உள்ளன. இவற்றில் 80 சதவீத லாரிகள் இயக்கப்படவில்லை. பெரும்பாலான லாரிகள் ஓடாததால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் பணி பாதிக்கப்பட்டது’ என்றார்.
முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவாக கொடைக்கானல் நகரில் 60 சதவீத கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பஸ், கார்கள் வழக்கம் போல இயங்கின. சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தபோதிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் சுற்றுலா இடங்களிலேயே அவர்கள் பொழுதை கழித்தனர்.

இதேபோல் ஒட்டன்சத்திரம், கன்னிவாடி, ஸ்ரீராமபுரம், மூலச்சத்திரம், ரெட்டியார்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் 60 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காலையில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தபோதும், மாலை முதல் வழக்கம்போல செயல்பட தொடங்கியது. இதேபோல் நத்தம், சாணார்பட்டி, கொசவபட்டி பகுதிகளில் பெரும்பாலான கடைகள் திறந்திருந்தன. 

Next Story