லாரிகள் ஓடாததால் ரூ.10 கோடி சரக்குகள் தேக்கம் மறியலில் ஈடுபட்ட 60 பேர் கைது


லாரிகள் ஓடாததால் ரூ.10 கோடி சரக்குகள் தேக்கம் மறியலில் ஈடுபட்ட 60 பேர் கைது
x
தினத்தந்தி 11 Sept 2018 4:00 AM IST (Updated: 11 Sept 2018 1:41 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து கரூரில் முழுஅடைப்பு போராட்டம் செய்யப்பட்டதுடன், லாரிகள் ஓடாததால் ரூ.10 கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கம் அடைந்தன. மேலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர்,

பெட்ரோல் விலை ரூ.80-க்கு மேலும், டீசல் விலை ரூ.75-க்கு மேலும் உயர்ந்து கொண்டே போகிறது. இதனால் அன்றாடம் வேலை நிமித்தமாக இருசக்கர வாகனங்களில் வெளியே செல்லும் சாமானிய மக்கள் உள்ளிட்டோர் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். மேலும் டீசல் விலையுயர் வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயருகிறது. எனவே பெட்ரோல்- டீசல் விலையுயர்வை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் நாடு தழுவிய வகையில் செப்டம்பர் 10-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இந்த போராட்டத்திற்கு தமிழகத்தில் தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் ஆதரவு அளித்தனர்.

அந்த வகையில் நேற்று கரூரில் நடந்த முழு அடைப்பு போராட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. கரூர் ஜவகர்பஜார், பழைய பைபாஸ் ரோடு, திருமாநிலையூர், செங்குந்தபுரம், பசுபதிபாளையம் உள்ளிட்ட நகரின் பெரும்பாலான பகுதியில் கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. வெள்ளியணை வர்த்தக சங்கம் சார்பில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்ததால் அங்கு முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. உப்பிடமங்கலம், புலியூர், மாயனூர், கிருஷ்ணராயபுரம் ஆகிய பகுதிகளில் ஒரு சில கடைகளை தவிர பெரும்பாலான கடைகள் திறந்திருந்தன. அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் உள்ளிட்டவை வழக்கம் போல் இயங்கியதால் பொதுமக்கள் போக்குவரத்தினை மேற்கொள்வதில் எவ்வித சிரமமும் ஏற்படவில்லை. கரூரில் உழவர் சந்தை, காமராஜர் மார்க்கெட், வாழைக்காய் மார்க்கெட் உள்ளிட்டவை வழக்கம் போல் இயங்கின.

எனினும் கரூர் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 2,000 லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், கரூரில் இருந்து வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படும் ஜவுளி, கொசுவலை, சிமெண்டு, காகிதம் உள்ளிட்ட ரூ.10 கோடி மதிப்பிலான உற்பத்தி பொருட்கள் தேக்கம் அடைந்தன. சில நிறுவன உரிமையாளர்கள் ரெயில் பார்சல் சேவையை பயன்படுத்தி ஏற்றுமதி பொருட்களை அனுப்பி வைத்தனர். கரூர் பசுபதீஸ்வரர் கோவில் அருகே, திருமாநிலையூர் உள்ளிட்ட இடங்களில் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்ததை காண முடிந்தது. அரவக்குறிச்சி பகுதியில் முருங்கைகாய்கள், லாலாபேட்டை- குளித்தலை பகுதியில் வாழைக்காய் தார்கள் உள்ளிட்டவற்றை விற்பனைக்காக கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் சற்று சிரமத்திற்கு ஆளாகினர். எண்ணெய் நிறுவனங்களின் லாபத்திற்காக பெட்ரோல்- டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதனால் சாமானிய மக்கள், மோட்டார் வாகன தொழிலில் ஈடுபடுவோர் உள்ளிட்டோருக்கு பெரும் பின்னடைவு தான். எனவே பெட்ரோல்- டீசல் விலையை குறைக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என லாரி உரிமையாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வக்கீல் ராஜூ தெரிவித்தார்.

கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கரூர் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் பேங்க் சுப்ரமணியன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் கபினி சிதம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்டவற்றால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றனர். இந்த நிலையில் பெட்ரோல்- டீசல் விலையை வரலாறு காணாத வகையில் மத்திய அரசு உயர்த்தியிருப்பதை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் எண்ணெய் நிறுவனங்களின் லாபத்திற்காக செயல்படுவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும், பெட்ரோலிய பொருட்களுக்கான வரிவிதிப்பினை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். அப்போது மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை அவர்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்டார தலைவர்கள் ராஜ்குமார் (க.பரமத்தி), மனோகரன் (தாந்தோன்றிமலை), ராஜேந்திரன் (கிருஷ்ணராயபுரம்), ஆடிட்டர் ரவிசந்திரன் (கரூர்) உள்பட காங்கிரஸ் கட்சியினர் மற்றும் தி.மு.க., ம.தி.மு.க., திராவிடர் கழகம் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கரூர் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் கந்தசாமி தலைமையில் பெட்ரோல்- டீசல் விலையுயர்வை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் அந்த கட்சியினர் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர். அப்போது அங்கு பாதுகாப்புக்காக நின்ற போலீசார், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ரத்தினம், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ஜீவானந்தம் உள்பட மறியலில் ஈடுபட்ட 60 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை கரூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Next Story