தூத்துக்குடியில் கடைகள் அடைப்பு-மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை


தூத்துக்குடியில் கடைகள் அடைப்பு-மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
x
தினத்தந்தி 11 Sept 2018 3:30 AM IST (Updated: 11 Sept 2018 2:01 AM IST)
t-max-icont-min-icon

முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தூத்துக்குடியில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்டு கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி, 

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்துக்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. அதன்படி நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. தூத்துக்குடி மாவட்டத்திலும் முழு அடைப்பு போராட்டம் நடந்தது.

இதில் தூத்துக்குடி, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மாவட்டம் முழுவதும் சுமார் 5 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. தூத்துக்குடியில் விசைப்படகு உரிமையாளர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் விசைப்படகுகள் அனைத்தும் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. வெளியூர்களில் இருந்து தூத்துக்குடிக்கு வழக்கமாக வருகிற பார்சல் சர்வீஸ் லாரிகள் இயங்கவில்லை. அதே நேரத்தில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து வழக்கம் போல் லாரிகளில் சரக்கு ஏற்றி செல்லப்பட்டன.

தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் அர்ச்சுணன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் ரசல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு புறநகர் செயலாளர் பேச்சிமுத்து, ஒன்றிய செயலாளர் சங்கரன், இந்திய கம்யூனிஸ்டு மாநகர செயலாளர் ஞானசேகரன், சுப்பிரமணியன், சேகர் உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட 9 பெண்கள் உள்பட 55 பேரை கைது செய்தனர். 

Next Story