மதுபோதையில் தகராறு செய்த தொழிலாளி அடித்துக் கொலை


மதுபோதையில் தகராறு செய்த தொழிலாளி அடித்துக் கொலை
x
தினத்தந்தி 10 Sep 2018 10:00 PM GMT (Updated: 10 Sep 2018 8:50 PM GMT)

தட்டார்மடம் அருகே மதுபோதையில் தகராறு செய்த தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய தாய்-தம்பி உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

தட்டார்மடம், 


தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள தச்சன்விளை பள்ளம்தட்டுவிளை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 63). இவருடைய மனைவி கிருஷ்ணவேணி (58). இவர்களுக்கு 6 மகள்கள், 2 மகன்கள்.
இதில் மூத்த மகன் முத்துகுமார் (34) கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகவில்லை. இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் முத்துகுமார் சரியாக வேலைக்கு செல்லாமல், தினமும் மதுகுடித்து விட்டு, தன்னுடைய குடும்பத்தினரிடம் தகராறு செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் முத்துகுமார் மதுகுடித்து விட்டு தனது வீட்டுக்கு சென்று, குடும்பத்தினரிடம் தகராறு செய்தார். இதில் ஆத்திரம் அடைந்த முத்துகுமார் தன்னுடைய தாயார் கிருஷ்ணவேணியை அவதூறாக பேசி, அவரது கையில் கடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் கிருஷ்ணவேணி அலறி துடித்தார்.
உடனே அங்கு ஓடி வந்த இளைய மகன் சுயம்புலிங்கம் (24), மருமகன் மாரியப்பன் (35) மற்றும் கிருஷ்ணவேணி ஆகிய 3 பேரும் சேர்ந்து முத்துகுமாரை கையாலும், கம்பாலும் தாக்கினர்.

இதில் பலத்த காயம் அடைந்த முத்துகுமார் மயங்கி கீழே விழுந்து உயிருக்கு போராடினார். உடனே அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் முத்துகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில், தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன், கொலை வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கிருஷ்ணவேணி, சுயம்புலிங்கம், மாரியப்பன் ஆகிய 3 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்.

தட்டார்மடம் அருகே மதுபோதையில் தகராறு செய்த தொழிலாளியை தாய்-தம்பி உள்பட 3 பேர் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story