கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம் தி.மு.க.-காங்கிரஸ் சார்பில் ஊர்வலம்


கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம் தி.மு.க.-காங்கிரஸ் சார்பில் ஊர்வலம்
x
தினத்தந்தி 11 Sept 2018 4:00 AM IST (Updated: 11 Sept 2018 2:25 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். தி.மு.க.-காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலமாக சென்றனர்.

தர்மபுரி,

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து முழு அடைப்பு போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது. தர்மபுரி மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு காங்கிரஸ் தலைமையிலான தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் ஆங்காங்கே ஊர்வலமாக சென்று கடைகளை அடைக்க வலியுறுத்தினர்.

தர்மபுரி நகரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கேட்டும், கடைகளை அடைக்க வலியுறுத்தியும் காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோவி சிற்றரசு தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. முன்னிலையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் ஊர்வலமாக சென்றனர். காமராஜர் சிலை அருகில் உள்ள கடைகளை அவர்கள் அடைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியை குறைக்காத மத்திய அரசை கண்டித்தும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள் தங்கமணி, ரஹீம், செல்லதுரை, காங்கிரஸ் நிர்வாகிகள் சித்தையன், செந்தில்குமார், மோகன், கனகராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஜெயந்தி, மாவட்ட செய்தி தொடர்பாளர் அதியமான் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதே போல பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தர்மபுரி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தர்மபுரி, அரூர், பென்னாகரம் ஆகிய இடங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.

தர்மபுரி தலைமை தபால்நிலையம் முன்பு நடைபெற்ற மறியல் பேராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.தேவராசன் ஆகியோர் தலைமை தாங்கினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, இளம்பரிதி, நாகராசன், ராமச்சந்திரன், கிரைசாமேரி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் கோபால், கிருஷ்ணராஜ், மகாதேவன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். பின்னர் அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து போலீசார் மறியலில் ஈடுபட்ட 150 பேரை கைது செய்தனர்.

அரூரில் நடைபெற்ற மறியலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் மல்லிகா, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் அல்லிமுத்து ஆகியோர் தலைமை தாங்கினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முத்து, சிசுபாலன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட துணை செயலாளர் காசி.தமிழ்குமரன் மற்றும் செங்கொடி உள்ளிட்டோர் பேசினர். இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

பென்னாகரத்தில் நடைபெற்ற மறியலுக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.மாதன் தலைமை தாங்கினார். இந்த மறியலில் ஈடுபட்ட 32 பேரை போலீசார் கைதுசெய்தனர். மாவட்டம் முழுவதும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 222 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிங்காரப்பேட்டை பஸ் நிறுத்தம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், விலை உயர்வை கண்டித்து நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியலில் ஈடுபட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோவிந்தசாமி, பகுதி செயலாளர் எத்திராஜ் உள்ளிட்ட 25 பேரை சிங்காரப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

வேப்பனப்பள்ளி, தேன்கனிக்கோட்டை, ஊத்தங்கரை பகுதியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கடையடைப்பு போராட்டம் நடந்தது.


Next Story