ரூ.1 கோடி கேட்டு கடத்தப்பட்ட ராஜஸ்தான் நிதி நிறுவன உரிமையாளர்கள் 2 பேர் மீட்பு
ரூ.1 கோடி கேட்டு கடத்தப்பட்ட ராஜஸ்தானை சேர்ந்த நிதி நிறுவன உரிமையா ளர்கள் 2 பேர் மீ்ட்கப்பட் டனர். இது தொடர்பாக போலீஸ்காரர் உள்பட 6 பேர் கைது செய்யப் பட்டனர்.
தானே,
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரை சேர்ந்த தேவாந்த், ரோகன் ஆகிய 2 பேர் நிதி நிறுவனம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு அறிமுகமான லெனின் என்பவர் கட்டுமான அதிபர் என ஓம்பிரகாஷ் என்பவரை அவர்களுக்கு அறிமுகம் செய்தார். அப்போது, ஓம்பிரகாஷ் அவர்களிடம் தானேயில் அடுக்குமாடி கட்டிடம் கட்டுவதற்கு தனக்கு ரூ.10 கோடி தேவைப்படுவதாக கூறினார்.
இதற்கு சம்மதம் தெரிவித்த அவர்கள், அடுக்குமாடி கட்டிட பணிகள் நடைபெற உள்ள இடத்தை பார்ப்பதற்காக தானே வந்தனர்.
கடத்தல்
இந்தநிலையில், லெனின் மற்றும் ஓம்பிரகாஷ் ஆகியோர் மேலும் 4 பேருடன் சேர்ந்து நிதி நிறுவன உரிமையாளர்கள் இருவரையும் கடத்தினர். ரூ.1 கோடி தந்தால் தான் உயிருடன் விடுவோம் என மிரட்டினர். இதனால் பயந்துபோன இருவரும் தங்களது நண்பர் ஒருவரிடம் பணத்தை கொண்டு வரும்படி கூறினார்கள்.
அவர் உடனடியாக ரூ.25 லட்சத்துடன் காரில் தானே விரைந்தார். அவரிடம் பணத்தை வாங்கிக்கொண்ட அந்த கும்பல் நிதிநிறுவன உரிமையாளர்களை விடுவிக்காமல் சென்றனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கடத்தல் ஆசாமிகளின் கார் பதிவு எண்ணை குறித்து கொண்டு மும்பையில் உள்ள தனது நண்பர் ஒருவரிடம் சம்பவத்தை கூறி உதவி கேட்டார்.
6 பேர் கைது
பின்னர் அவர்கள் இதுபற்றி போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் கடத்தல்காரர்களின் கார் பதிவு எண்ணை கொண்டு அவர்களை பிடிக்க தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அந்த கும்பலை சேர்ந்தவர்களின் கார் கல்யாண் ஏ.பி.எம்.சி. மார்க்கெட் பகுதியில் வந்தபோது, போலீசார் அதை கண்டுபிடித்து மடக்கினர். காரில் இருந்த நிதி நிறுவன உரிமையாளர்கள் இருவரையும் மீட்டனர்.
மேலும் அவர்களை கடத்தி பணம் பறித்த லெனின், ஓம்பிரகாஷ், ரோகித், அபிசேக், சாகர் சால்வே, துக்காராம் முட்கன் ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.
விசாரணையில் துக்காராம் முட்கன் மும்பையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருவது தெரியவந்தது. அவர்களிடம் இருந்த ரூ.25 லட்சம், 2 வாள்கள் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story