திருவாரூர் மாவட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 900 பேர் கைது


திருவாரூர் மாவட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 900 பேர் கைது
x
தினத்தந்தி 10 Sep 2018 10:30 PM GMT (Updated: 10 Sep 2018 9:35 PM GMT)

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருவாரூர் மாவட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 900 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவாரூர்,

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து இருந்தன. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி திருவாரூர் பஸ் நிலையம் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

போராட்டத்துக்கு காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகி செந்தில்பாண்டியன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராஜா, வட்டார தலைவர் சக்தி சபரிநாதன், பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் 25 பேரை போலீசார் கைது செய்தனர். கடை அடைப்பு போராட்டத்துக்கு திருவாரூர் விஜயபுரம் வர்த்தகர் சங்கம் ஆதரவு அளிக்கவில்லை. இதனால் திருவாரூரில் பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தன. வணிகர் சங்கங்களின் பேரமைப்பை சேர்ந்த கடைகள் மட்டும் அடைக்கப்பட்டிருந்தன. முழு அடைப்பு போராட்டத்தையொட்டி திருவாரூரில் நேற்று லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் லாரிகள் ஓடவில்லை.

முழு அடைப்பு போராட்டத்தையொட்டி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மன்னார்குடி பஸ் நிலையம் முன்பு தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராஜமாணிக்கம், வை.சிவபுண்ணியம், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் பாலு, காங்கிரஸ் கட்சி நகர தலைவர் கனகவேல், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் பாலசந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கோட்டூரில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் பால.ஞானவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் சண்முகவேல் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

முழு அடைப்பு போராட்டத்தையொட்டி நீடாமங்கலத்தில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆட்டோ, வேன்கள், கார்கள் ஓடவில்லை. பஸ்கள் வழக்கம்போல் ஓடின. இந்த நிலையில் நீடாமங்கலம் ரெயில் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் நீலன்.அசோகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் சோம.ராஜமாணிக்கம், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் நடேச.தமிழார்வன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைச்செயலாளர் அமுதவளவன் ஆகியோர் உள்பட 61 பேரை போலீசார் கைது செய்தனர். சாலை மறியல் காரணமாக நீடாமங்கலத்தில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கொரடாச்சேரி, அம்மையப்பன், குளிக்கரை, அத்திக்கடை உள்ளிட்ட இடங்களில் ஓட்டல்கள், மளிகை கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதையொட்டி கொரடாச்சேரி வெட்டாற்று பாலம் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க. மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பாலச்சந்தர், கலியபெருமாள், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் தாழை அறிவழகன், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் துரைவேலன், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் கேசவராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் சீனிவாசன் ஆகியோர் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். சாலை மறியல் காரணமாக திருவாரூர்-தஞ்சை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேரளத்தில் பல்வேறு கட்சிகள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு வரத.கோ.ஆனந்த் தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி கவுதமன், காங்கிரஸ் கட்சி வட்டார தலைவர் ஜெயகுமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். சாலை மறியல் காரணமாக திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்து கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, பொதக்குடி, வடபாதிமங்கலம், அரிச்சந்திரபுரம், கமலாபுரம், புனவாசல் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி கூத்தாநல்லூர் தபால் அலுவலகம் முன்பு தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். லெட்சுமாங்குடியில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருத்துறைப்பூண்டியில் நேற்று 500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதையொட்டி புதிய பஸ் நிலையம் அருகே காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் எழிலரசன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. நகர செயலாளர் பாண்டியன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பழனிசாமி, உலகநாதன், ஒன்றிய செயலாளர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்டக்குழு உறுப்பினர் ஜோதிபாசு உள்ளிட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

முழுஅடைப்பு போராட்டத்தையொட்டி முத்துப்பேட்டை, இடும்பாவனம், உதயமார்த்தாண்டபுரம், நாச்சிக்குளம், ஆலங்காடு, எடையூர், சங்கேந்தி, பாண்டி ஆகிய இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. முத்துப்பேட்டை, கோபாலசமுத்திரம், பாண்டி ஆகிய 3 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் வட்டார தலைவர் பாலகிருஷ்ணன், தி.மு.க. மாநில விவசாய பிரிவு செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 13 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 900 பேர் கைது செய்யப்பட்டனர்.

Next Story