காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் 16 இடங்களில் மறியல்


காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் 16 இடங்களில் மறியல்
x
தினத்தந்தி 11 Sept 2018 5:03 AM IST (Updated: 11 Sept 2018 5:03 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று குமரி மாவட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் 16 இடங்களில் மறியலில் ஈடுபட்டனர். 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 1,079 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாகர்கோவில், 

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய பா.ஜனதா அரசை கண்டித்தும் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி, குமரி மாவட்டத்தில் தக்கலை, மார்த்தாண்டம், குழித்துறை, கருங்கல், திங்கள்சந்தை, குலசேகரம், கொல்லங்கோடு உள்பட பல்வேறு இடங்களில் நேற்று காலையில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மார்த்தாண்டம் பகுதியில் பெரும்பாலான ஆட்டோ, கார், வேன் போன்றவை ஓடவில்லை. ஆனால், மாவட்டம் முழுவதும் அரசு பஸ்கள் வழக்கம் போல் ஓடின.

முழு அடைப்பு போராட்டத்தையொட்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் மறியலில் ஈடுபட்டனர்.

நாகர்கோவில் அண்ணா பஸ்நிலையம் அருகே காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்ற மறியல் போராட்டம் நடந்தது. மறியல் போராட்டத்துக்கு குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

காங்கிரஸ் நகர தலைவர் என்ஜினீயர் அலெக்ஸ், இளைஞரணி மாநில செயலாளர் நவீன்குமார், நிர்வாகிகள் மகேஷ்லாசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் செல்லசுவாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அந்தோணி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வெற்றிவேல், மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கம்யூனிஸ்டு (விடுதலை) மாவட்ட செயலாளர் அந்தோணி முத்து, தேசியவாத காங்கிரஸ் மாவட்ட தலைவர் செல்வம், தி.மு.க. மீனவரணி மாநில செயலாளர் பெர்னார்டு, திராவிடர் கழக மண்டல செயலாளர் வெற்றி வேந்தன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் மறியலில் ஈடுபட்டதாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நாகர்கோவில் துணை சூப்பிரண்டு இளங்கோ தலைமையிலான போலீசார் அனைவரையும் கைது செய்து அரசு பஸ்சில் ஏற்றி வடிவீஸ்வரம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். இதில் வக்கீல் ராதாகிருஷ்ணன் உள்பட 83 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 23 பேர் பெண்கள்.

கருங்கல் தபால் நிலையம் சந்திப்பில் நேற்று காலையில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரஸ், தி.மு.க. உள்பட பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் கூடினர். அவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். அப்போது, அந்த வழியாக ஒரு அரசு பஸ் சென்றது. உடனே, அரசியல் கட்சியினர் சாலையில் அமர்ந்து பஸ்சை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கருங்கல் இன்ஸ்பெக்டர் பொன்தேவி தலைமையிலான போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. மற்றும் 10 பெண்கள் உள்பட 110 பேரை கைது செய்து அருகில் இருந்த திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த போராட்டத்தில், காங்கிரஸ் மேற்கு மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் பால்மணி, கிள்ளியூர் வட்டார தலைவர் டென்னிஸ், பொது குழு உறுப்பினர் டைட்டஸ், தி.மு.க. கிள்ளியூர் வட்டார செயலாளர் டி.பி. ராஜன், மகளிர் அணி அமைப்பாளர் கிளாடிஸ் லில்லி, கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கிள்ளியூர் வட்டார செயலாளர் சாந்தகுமார் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திங்கள்சந்தை ரவுண்டானாவில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் கூடினர். அவர்கள் அங்கிருந்து பஸ் நிலையம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு சென்று பஸ் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு பிரின்ஸ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி. பெல்லார்மின், காங்கிரஸ் வட்டார தலைவர்கள் டென்னிஸ், ஜெரால்டு கென்னடி, கிளாட்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பிரின்ஸ் எம்.எல்.ஏ. உள்பட 127 பேரை இரணியல் போலீசார் கைது செய்து அருகே இருந்த தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

தக்கலை பஸ் நிலையம் முன்பு தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். காங்கிரஸ் நகர தலைவர் அனுகுமார் தலைமை தாங்கினார். தி.மு.க. முன்னாள் அமைச்சர் லாரன்ஸ் போராட்டத்தை தொடங்கி வைத்தார். தி.மு.க. சார்பில் நகர செயலாளர் மணி, ஒன்றிய செயலாளர் அருளானந்த ஜார்ஜ், மாநில சட்டப்பிரிவு துணை செயலாளர் வக்கீல் தினேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தக்கலை வட்டார செயலாளர் சுஜா ஜாஸ்பின், ம.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் கிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தக்கலை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களை வேனில் ஏற்றி அழைத்து செல்ல முயன்றனர். ஆனால், போராட்டக்காரர்கள் வேனில் ஏற மறுப்பு தெரிவித்து, ஊர்வலமாக நடந்து செல்வதாக கூறினர். இதையடுத்து போலீசார் அவர்களை ஊர்வலமாக அழைத்து சென்று அருகில் இருந்த திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதில் 10 பெண்கள் உள்பட 92 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கடை பஸ் நிலையம் முன்பு நடந்த மறியல் போராட்டத்தில் முன்சிறை வட்டார காங்கிரஸ் தலைவர் பால்ராஜ், பைங்குளம் பேரூர் தி.மு.க. செயலாளர் அம்சி நடராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். புதுக்கடை பேரூர் தி.மு.க. செயலாளர் மோகன், விளாத்துறை கம்யூனிஸ்டு மாவட்ட பொது குழு உறுப்பினர் ஜான் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 38 பேரை புதுக்கடை இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தலைமையிலான போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

அருமனை சந்திப்பில் நடந்த மறியல் போராட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சியின் அருமனை வட்டார குழு தலைவர் ஜெயராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் தி.மு.க. மேல்புறம் வட்டார செயலாளர் சிற்றார் ரவிச்சந்திரன், ஜனதாதளம் கட்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 71 பேரை அருமனை போலீசார் கைது செய்து அருகில் இருந்த சமுதாய நலக்கூடத்தில் தங்க வைத்தனர்.

குழித்துறை அண்ணா சிலை சந்திப்பில் நடந்த மறியலில் காங்கிரஸ் நகர தலைவர் அருள்ராஜ் தலைமை தாங்கினார். போராட்டத்தில் சேவாதள தலைவர் ஜோசப் தயாசிங், மாவட்ட துணைத்தலைவர் ரவிசங்கர், தி.மு.க. நகர செயலாளர் பொன். ஆசைத்தம்பி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த அனந்தசேகர், மதசார்பற்ற ஜனதாதள ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேரை களியக்காவிளை போலீசார் கைது செய்து அருகில் இருந்த திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

மேல்புறம் சந்திப்பில் நடந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதிஷ்குமார், எட்வர்ட், மோகன்தாஸ், ஜெனிதா, கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த கோபால கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 70 பேரை அருமனை போலீசார் கைது செய்து அருகில் இருந்த திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

கண்ணநாகம் சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜய மோகனன் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் வட்டார செயலாளர் ரெஜி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 7 பெண்கள் உள்பட 35 பேரை கொல்லங்கோடு போலீசார் கைது செய்து அருகில் இருந்த திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

நடைக்காவு சந்திப்பில் நடந்த மறியல் போராட்டத்தில் காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் ஆமோஸ், நடைக்காவு தலைவர் கிருஷ்ணராஜ், தி.மு.க. ஒன்றிய செயலாளர் மனோன்மணி உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 7 பெண்கள் உள்பட 47 பேரை போலீசார் கைது செய்தனர்.

குலசேகரம் கான்வென்ட் சந்திப்பில் நடந்த மறியல் போராட்டத்தில் திருவட்டார் வட்டார காங்கிரஸ் தலைவர் கிளாஸ்டிஸ் கிளிட்டஸ் தலைமை தாங்கினார். தி.மு.க.வை சேர்ந்த ஜோஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ஸ்டாலின் தாஸ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டதாக 64 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவட்டார் பஸ் நிலையம் எதிரே நடந்த மறியல் போராட்டத்தில் வட்டார காங்கிரஸ் தலைவர் ஜெகன்ராஜ் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் ரத்தினகுமார், மாவட்ட செயலாளர்கள் ஐ.ஜி.பி. லாரன்ஸ், ஜான் இக்னேசியஸ், காங்கிரஸ் மாவட்ட பொது செயலாளர் ஜான் சேவியர், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ஜாண் கிறிஸ்டோபர், கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த வில்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 76 பேரை திருவட்டார் போலீசார் கைது செய்து அருகில் இருந்த திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

நித்திரவிளை சந்திப்பில் நடந்த மறியல் போராட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராஜேஷ், ஏழுதேசம் பேரூர் காங்கிரஸ் தலைவர் ராஜேந்திர குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட குழு உறுப்பினர் தங்கமணி, முன்சிறை ஒன்றிய செயலாளர் சிதம்பர கிருஷ்ணன், தி.மு.க.வை சேர்ந்த அப்துல்ரகுமான் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 9 பெண்கள் உள்பட 47 பேரை நித்திரவிளை போலீசார் கைது செய்து அருகில் இருந்த திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதேபோல் கன்னியாகுமரி கொட்டாரம், ஈத்தாமொழி, திட்டுவிளை ஆகிய இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது.

மாவட்டம் முழுவதும் காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் 16 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார் உள்பட 1,079 பேர் கைது செய்யப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். 

Next Story