மாணவியை கிண்டல் செய்ததால் உறவினர்கள் தாக்கினர்: விஷம் குடித்து பிளஸ்-2 மாணவர் தற்கொலை


மாணவியை கிண்டல் செய்ததால் உறவினர்கள் தாக்கினர்: விஷம் குடித்து பிளஸ்-2 மாணவர் தற்கொலை
x
தினத்தந்தி 11 Sept 2018 5:07 AM IST (Updated: 11 Sept 2018 5:07 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே மாணவியை கிண்டல் செய்ததால் அவரது உறவினர்கள் பிளஸ்-2 மாணவரை தாக்கினர். இதனால் மனமுடைந்த மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து மாணவரின் உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த வல்லம் மாரியம்மன் கோவில் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் ராகுல்(வயது 17). இவர் வல்லத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். வல்லம் பகுதியை சேர்ந்த ஒரு மாணவி தஞ்சையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

இவர் தினமும் வல்லத்தில் இருந்து பஸ்சில் தஞ்சையில் உள்ள பள்ளிக்கு வந்து விட்டு செல்வார். இவ்வாறு பஸ்சில் வந்து செல்லும் மாணவி, வல்லம் பஸ் நிலையத்தில் நிற்கும்போது ராகுல், அந்த மாணவியை கிண்டல் செய்ததாக தெரிகிறது. இதை அந்த மாணவி கண்டித்துள்ளார்.

மேலும் அந்த மாணவி தனது உறவினர்களிடமும், ராகுல் கிண்டல் செய்தது குறித்து தெரிவித்துள்ளார். உடனே அந்த மாணவியின் உறவினர்கள் சேர்ந்து ராகுலை தாக்கினர். இதை அந்த மாணவருடன் படிக்கும் மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பார்த்து விட்டனர். இதனால் விரக்தி அடைந்த மாணவன் ராகுல், விஷம் குடித்தார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே மாணவர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, அவருடைய உறவினர்கள் 30-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை வல்லம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள், மாணவர் ராகுலை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி கோஷங்கள் எழுப்பினர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மாணவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்ததால் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story