சமூக வலைத்தளங்களில் உலவும் போலி வேலைவாய்ப்புகள்


சமூக வலைத்தளங்களில் உலவும் போலி வேலைவாய்ப்புகள்
x
தினத்தந்தி 11 Sept 2018 12:58 PM IST (Updated: 11 Sept 2018 12:58 PM IST)
t-max-icont-min-icon

சமூக வலைத்தளங்கள் இன்று மக்களின் மனங்களை கட்டிப் போட்டிருக்கின்றன. குறிப்பாக இளைஞர்கள் பலரும், சதா நேரமும் சமூக வலைத்தளங்களில் மூழ்கியிருக்கிறார்கள்.

எல்லாத் துறை பற்றிய தகவல்களும் ரசனையைத் தூண்டும் வகையில் வலைத்தளங்களில் வெளிவருவது மக்களின் ரசிப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது. ஆனால் வலைத்தளங்களில் வரும் அனைத்தும் உண்மையா? என்பது கேள்விக்குறிதான். படங்கள், தகவல்கள், புள்ளிவிவரங்கள் என அனைத்தும் திரிக்கப்பட்டும், போலியாக சித்தரிக்கப்பட்டும் வெளியாகும் நிகழ்வுகள் நிறைய நடக்கிறது. போலியைத் தடுப்பதற்காக வலைத்தள நிறுவனங்களே திணறிக் கொண்டிருக்கின்றன.

போலிகளில் பலரையும் வெகுவாக நம்பவைத்து மோசடி செய்வது போலி வேலைவாய்ப்பு செய்திகள்தான். சில மாதங்களுக்கு முன்பு, கேரள வாலிபர் ஒருவர், மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் பெயரில் போலி இணையதளம் உருவாக்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டு மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதுபோல வெளியே தெரியாத பல போலி வேலைவாய்ப்பு தளங்கள் இயங்கி வருகின்றன. போலி வேலைவாய்ப்பு அறிவிப்புகளும் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.

சமீப காலமாக தமிழக காவல் துறையில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட வேலை என்றும், இந்திய பாஸ்போட் நிறுவனங்களில் பல ஆயிரம் வேலைகள் என்ற செய்தியும், இன்னும் இதுபோன்ற பல அறிவிப்புகளும் வெளியாகி வேகமாக பரவி வருகின்றன. இவை உண்மையானவை அல்ல.

போலி வேலைவாய்ப்பு அறிவிப்புகளின் வழியே மோசடியில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்...

முதலில் போலி வேலைவாய்ப்பு அறிவிப்புகளில் முழுமையான விவரங்கள் இருக்காது. காலியிட விவரம், கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் கடைசித் தேதி, விண்ணப்பிக்கச் செல்ல வேண்டிய இணையதள முகவரி போன்ற விவரங்கள் இருப்பதில்லை. மாறாக தங்கள் இணைய பக்கத்தின் வழியே செல்வதற்காக ஒரு இணைய தொடர்பு (“லிங்க் அட்ரஸ்”) முகவரி மட்டும் கொடுத்திருப்பார்கள்.

அப்படி தனியார் இணைய பக்கத்தில் விளம்பர அறிவிப்பை பார்த்தால் நிச்சயம் அரசு இணையதளத்திற்குச் சென்று அதன் உண்மைத் தன்மையை சோதித்துப் பார்க்க வேண்டும். மாறாக அவர்கள் கொடுத்திருக்கும் “லிங்க் ” வழியே விண்ணப்பிக்கத் தொடங்கினால், பண இழப்பும், மனக் கஷ்டமும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

மேலும் இப்போது பெரும்பாலான வேலைவாய்ப்புக்கு இணையதளம் வழியேதான் விண்ணப்பிக்க வேண்டியிருக்கும். எனவே முகவரிக்கு தபால் வழியே விண்ணப்பிக்கவும், டி.டி. எடுக்கவும் கோரியிருந்தால் கவனமாக செயல்பட வேண்டும்.

அரசு வேலைவாய்ப்புகள் அனைத்தும் முறைப்படி தினசரி பத்திரிகைகளில் விளம்பர அறிவிப்பு கொடுத்து, தங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு திறந்த நிலை அறிவிப்புகளாகத்தான் வெளிவருகின்றன. எனவே அரசு இணையதளங்களிலும், அன்றாட பத்திரிகைகளிலும் வெளியாகும் அரசு அறிவிப்புகளை பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பிக்கத் தொடங்குகள்,

போலி இணையதளங்கள், அரசு இணைய முகவரியின் சாயலில் ஓரிரு எழுத்துகள் மாற்றப்பட்டே இயங்குகின்றன. எனவே வேலைவாய்ப்பு தேடுபவர்கள் அரசு இணையதளங்களின் அசல் முகவரியையும் அறிந்து வைத்துக் கொள்வது ஏமாறாமல் இருக்க உதவும்.

இணையதள போலி அறிவிப்புகளிடமும், அரசு வேலைபெற்றுத் தருவதாக மோசடி நடத்தும் கும்பலிடமும் சிக்கிக்கொள்ளாமல் இருக்க உஷார் நிலையில் இருப்பது இன்றைய வேலை தேடுனர்களுக்கான முக்கிய பண்பாகும்.


Next Story