கொள்ளிடம் ஆற்றில் ரூ.410 கோடியில் புதிய கதவணை கட்டுவதற்கு மண் பரிசோதனை தொடங்கியது


கொள்ளிடம் ஆற்றில் ரூ.410 கோடியில் புதிய கதவணை கட்டுவதற்கு மண் பரிசோதனை தொடங்கியது
x
தினத்தந்தி 12 Sept 2018 4:00 AM IST (Updated: 11 Sept 2018 11:40 PM IST)
t-max-icont-min-icon

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் ரூ.410 கோடியில் புதிய கதவணை கட்டுவதற்காக மண் பரிசோதனை செய்யும் பணி தொடங்கியது.

ஜீயபுரம்,

கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், முக்கொம்பு கொள்ளிடம் அணையின் 9 மதகுகள் இடிந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. இடிந்த பகுதியில் தற்காலிக சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.

ஆற்றுக்குள் இரும்பு குழாய்கள் மற்றும் சவுக்கு கட்டைகளை இறக்கியும், பெரிய பாறாங்கற்களை கொட்டியும், மணல் மூட்டைகளை அடுக்கியும் தண்ணீரை தேக்கினர். ஆனாலும் நீர்க்கசிவு முழுமையாக தடுத்து நிறுத்தப்படவில்லை. தண்ணீர் கசிந்து செல்வதை தடுத்து நிறுத்தும் பணியில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கொள்ளிடம் அணையில் உடைப்பு ஏற்பட்டதும், தற்காலிக சீரமைப்பு பணிகளை பார்வையிட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பழைய அணையில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் ரூ.410 கோடியில் புதிதாக கதவணை கட்டப்படும் என்று அறிவித்தார்.

முதல்-அமைச்சர் அறிவிப்பை தொடர்ந்து புதிய கதவணை கட்டுவதற்கான ஆலோசனைகள் வழங்குவதற்காக ஒரு தனியார் நிறுவனம் நியமிக்கப்பட்டு உள்ளது. அந்த நிறுவனத்தை சேர்ந்த பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் 6 பேர் நேற்று முக்கொம்புக்கு வந்து தங்களது ஆய்வு பணிகளை தொடங்கி உள்ளனர்.

இந்த குழுவினர் முதல்கட்டமாக 45 மதகுகள் கொண்ட அணையின் அருகில் 9 இடங்களிலும், 10 மதகுகள் கொண்ட அணை பகுதியில் 4 இடங்களிலும் மண் பரிசோதனை செய்வதற்கான பூர்வாங்க பணிகளை தொடங்கி உள்ளனர்.

இதற்காக அந்த பகுதிகளில் ஆற்றுக்குள் கருவிகள் மூலம் துளை போடப்பட்டு வருகிறது. மண்ணின் உறுதித்தன்மை, நீர்மட்டம் ஆகியவற்றை அறிவதற்காக இந்த பரிசோதனை நடத்தப்படுவதாகவும், மேலும் நவீன கருவிகளின் உதவியுடன் நிலம் அளவு எடுக்கும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த பணிகள் முடிவடைந்த பின்னர் புதிய கதவணையை எப்படி அமைப்பது? என்பது பற்றிய வரைபடம் தயாரிக்கப்பட இருப்பதாகவும் தொழில்நுட்ப குழுவினர் தெரிவித் தனர்.

Next Story