வறட்சியால் கருகும் மா, தென்னை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்


வறட்சியால் கருகும் மா, தென்னை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 12 Sept 2018 4:15 AM IST (Updated: 12 Sept 2018 12:26 AM IST)
t-max-icont-min-icon

வறட்சியால் கருகும் மா, தென்னை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டர் பிரபாகரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் பிரபாகரிடம், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.ஏ.சின்னசாமி தலைமையிலான விவசாயிகள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள எண்ணேகொல்புதூர் தடுப்பணையில் இருந்து இடது மற்றும் வலது புறக்கால்வாய் அமைத்து ஏரிகளுக்கு தண்ணீர் விட வேண்டும். ஏற்கனவே, தமிழக அரசு அறிவித்துள்ள நீர்பாசன திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும். பருவமழை இல்லாமல், கிருஷ்ணகிரி உட்பட 20 மாவட்டங்களில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. மா மரங்கள், தென்னை, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் கருகி உள்ளதால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வறட்சி மாவட்டமாக அறிவித்து, தென்னை, மா மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஆறுகளில் இருந்து ஏரிகளுக்கு மின்மோட்டார் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல, ஆந்திரா, தெலுங்கானா மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதே போல், தமிழக அரசும் மின்மோட்டார் மூலம் ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து வகையான கடன்களையும் ரத்து செய்து வேண்டும்.

மாவட்டத்தில் யானைகள், காட்டுப்பன்றிகள் விளை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. எனவே, காட்டுப்பன்றிகளை சுட விவசாயிகளுக்கு அனுமதியளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் ஸ்ரீராம்ரெட்டி, செயலாளர் சென்னையநாயுடு, ஜெயராமன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Next Story