ஈரோட்டில் ஆசிரியர்கள் போராட்டம்
விடுமுறை நாட்களில் நீட் தேர்வு பயிற்சி மையம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து ஈரோட்டில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு,
மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழகத்தில் 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்தநிலையில் போட்டித்தேர்வுக்கு மாணவர்களை எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கூடம், செங்குந்தர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கூடம் ஆகிய 2 இடங்களில் நேற்று தொடங்கியது. இந்த பயிற்சி முகாமை ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி, ஈரோடு கல்வி மாவட்ட அதிகாரி முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டனர்.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி கூறும்போது, “ஈரோடு மாவட்டத்தில் 14 நீட் தேர்வு பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடப்பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஏற்கனவே சென்னையில் பயிற்சி பெற்ற பயிற்றுனர்கள் மூலமாக ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும் போட்டி தேர்வுகளை மாணவர்கள் எப்படி எதிர்கொள்வது? குறைந்த நேரத்தில் விரைவாக தேர்வை எழுத தயார் செய்வது? குறித்து கற்றுக்கொடுக்கப்படுகிறது. இதில் பயிற்சி பெறும் ஆசிரியர்கள் அந்தந்த மையங்களில் மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர்”, என்றார்.
இந்த முகாம் இன்றும் (புதன்கிழமை), நாளை மறுநாளும் (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.
முன்னதாக விடுமுறை நாட்களில் நீட் தேர்வு பயிற்சி மையத்தை நடத்த எதிர்ப்பு தெரிவித்து முதுகலை ஆசிரியர்கள் ஒரு மணிநேரம் பயிற்சி முகாமை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:-
அரசு மேல்நிலை பள்ளிக்கூடங்களில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் திறமையானவர்களை அதிக மதிப்பெண்கள் எடுக்க வைக்கவும், மெதுவாக கற்கும் திறனுடைய மாணவர்களை அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற வைக்கவும் சிறந்த முறையில் பணியாற்றி வருகிறோம். நடப்பு ஆண்டில் பிளஸ்-1 வகுப்பிற்கு புதிய பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த பாடங்களை மாணவர்களுக்கு கற்பிக்க நேரம் கிடைக்காததால் வேலை நாட்களில் காலை, மாலை மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்பு எடுத்து கற்றுக்கொடுத்து வருகிறோம். மேலும் பல ஆசிரியர்கள் அருகில் உள்ள மேல்நிலை பள்ளிக்கூடங்களில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு மாற்று பணியாகவும் வாரத்திற்கு 2 நாட்கள் சென்று பாடம் எடுக்கின்றனர்.
மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீடு பணிகளையும் செய்து வருகிறோம். பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுடைய தகவல்களை கணினியில் பதிவு செய்யும் பணிகளையும் செய்கிறோம். இதுபோல் ஏற்கனவே கூடுதல் பணிச்சுமையுடன் பணிபுரிந்து வரும் எங்களுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நீட் தேர்வு பயிற்சி எடுக்கவேண்டும் என்று கூறுவது மன அழுத்தத்தை தருகிறது. இதனால் வாரத்தின் 7 நாட்களிலும் பள்ளிக்கூடங்களுக்கு வரும் சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே பள்ளிக்கூட வேலை நாட்களில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்குவதில் எந்த ஆட்சேபனையும் எங்களுக்கு கிடையாது. ஆனால் அரசு விடுமுறை நாட்கள், சனி, ஞாயிற்றுக்கிழமையான விடுமுறை நாட்களில் போட்டி தேர்வுக்கான பயிற்சியை கொடுப்பது இயலாத காரியம். எனவே விடுமுறை நாட்களை தவிர்த்து வேலை நாட்களிலேயே கூடுதல் நேரம் நீட் தேர்வு பயிற்சி மையத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி பயிற்சி முகாமில் ஒரு மணிநேரம் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். இதேபோல் மேற்கொண்டு 2 நாட்கள் நடக்கும் பயிற்சி முகாமிலும், ஒரு மணிநேரம் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story