பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைக்கப்படுமா? முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி


பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைக்கப்படுமா? முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
x
தினத்தந்தி 12 Sept 2018 4:45 AM IST (Updated: 12 Sept 2018 1:00 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைக்கப்படுமா? என்பது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சென்னையில் இருந்து சேலம் காமலாபுரத்திற்கு விமானம் மூலம் வந்தார். பின்னர் அவர் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன்விவரம் வருமாறு:-

கேள்வி:- மேகதாது அணை தொடர்பாக கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி பிரதமரை சந்தித்திருக்கிறார். ஒரு சுமுகமான பேச்சுவார்த்தையை தமிழகத்துடன் நடத்தி கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார். இதில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?

பதில்:- ஏற்கனவே தமிழக அரசால் தெளிவாக குறிப்பிடப்பட்டுவிட்டது. உச்சநீதிமன்றத்திலும் தமிழக அரசினுடைய அனுமதி இல்லாமல் எந்த அணையும் கட்டப்படாது என்று தெளிவான தீர்ப்பு கூறப்பட்டிருக்கிறது. மேகதாதுவில் எக்காரணம் கொண்டும் அணை கட்டக்கூடாது என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு. ஏனென்றால், கடுமையான வறட்சி ஏற்பட்டபோதும், கர்நாடக அணைகளில் தண்ணீர் இருப்பு இருந்தும், குடிப்பதற்குக்கூட தண்ணீர் திறக்க அவர்கள் மறுத்துவிட்டார்கள். அந்தநிலையில், மேலும் ஒரு அணை கட்டப்பட்டால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுவிடும்.

கேள்வி:- பாலாறு அருகே அணைகள் கட்டப்பட்டு வருகிறதே?

பதில்:- தமிழக அரசு இதனை சட்ட ரீதியாக சந்திக்கும்.

கேள்வி:- கடந்த காலங்களில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ஒரு அமைச்சரை பற்றி குற்றச்சாட்டோ அல்லது ஒரு அதிகாரியை பற்றி குற்றச்சாட்டோ இருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்வார். சி.பி.ஐ. விசாரணை செய்தும் இதுவரை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்காததற்கு காரணம் என்ன?

பதில்:- குற்றச்சாட்டு சொன்னவுடன் அவர் குற்றவாளியாகி விட முடியாது. குற்றம் நிரூபிக்கப்பட்டால்தான் குற்றவாளியாக கருதப்படுவார்.

கேள்வி:- குற்றச்சாட்டு வந்த வுடன் முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தாரே?

பதில்:- அப்படி ஒன்றும் எடுத்த மாதிரி தெரியவில்லை. நானும் அமைச்சரவையில்தானே இருந்தேன்.

கேள்வி:- அமைச்சர் வேலுமணி மீதும்......

பதில்:- நான்தான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேனே. இந்த ஆட்சி சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது, மக்களிடத்திலே செல்வாக்கு அதிகரித்து கொண்டிருக்கிறது. வேண்டுமென்றே திட்டமிட்டு, அதை பல்வேறு வழிகளிலே தடை செய்ய முற்பட்டார்கள், எதிலும் அவர்களால் சாதிக்க முடியவில்லை. ஆகவே, இப்படிப்பட்ட ஒரு வழியை பின்பற்றி ஒரு குற்றச்சாட்டை சுமத்தி கொண்டிருக்கிறார்கள், அது உண்மையல்ல. ஆகவே, ஜெயலலிதாவினுடைய அரசு சட்ட ரீதியாக அனைத்தையும் செயல்படுத்தி கொண்டிருக்கிறது. எந்தத்துறையிலும் தவறு நடந்துள்ளதாக எங்களுக்கு புகார் வரவில்லை. அரசை பொறுத்தவரை சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. கடந்த கால தி.மு.க. ஆட்சியில் பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலவியிருந்தன. அவையெல்லாம் இனி வெளியிலே வரும்.

கேள்வி:- திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கு இப்போதே அ.தி.மு.க. பணம் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறதே?

பதில்:- பணம் கொடுத்தது என்பது தவறான செய்தி. ஒரு தேர்தலில் பணம் கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம். அப்படிப்பட்ட நிலைமையில் எங்களுடைய கழகம் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

கேள்வி:- வரப்போகும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மை பெறும் என்று அமித்ஷா சொல்லியிருக்கிறாரே?

பதில்:- அது அவர்களுடைய நிலைப்பாடு. தமிழகத்தை பற்றித்தான் பேச முடியும். அகில இந்திய அளவில் நம்முடைய கட்சி இல்லை. தமிழகத்தை பொறுத்தவரைக்கும் அ.தி.மு.க. பலம் பொருந்திய கட்சியாக இருந்து கொண்டிருக்கிறது. ஜெயலலிதா கடந்த பாராளுமன்ற தேர்தலில் 37 இடங்களில் தமிழகத்தில் வெற்றி பெற்றார். அந்த அளவிற்கு, இப்போதும், கழகத்தினுடைய வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.

கேள்வி:- ஜெயலலிதா இல்லாத சூழ்நிலையில் நீங்கள் முதல் தேர்தலை சந்திக்க போகிறீர்கள், எதை முன்னிறுத்தி பிரசாரம் செய்வீர்கள்?

பதில்:- எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்கள் கொண்டு வந்த திட்டங்களை நாங்கள் நிறைவேற்றி கொண்டிருக்கிறோம். தமிழகத்திலே இன்னும் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட இருக்கின்றன. அப்படிப்பட்ட திட்டங்களை எல்லாம் நிறைவேற்ற வேண்டுமென்று சொன்னால், மத்திய அரசினுடைய உதவி தேவை, நிதி தேவை. ஆகவே, யார் எங்களுக்கு நிதி உதவி செய்கிறார்களோ, உதவி செய்கிறார்களோ அவர்களுக்கு ஜெயலலிதா அரசு நிச்சயம் துணை நிற்கும். அந்த வகையில் எங்களுடைய செயல்பாடு இருக்கும்.

ஜெயலலிதா கடந்த தேர்தலில் 37 இடங்களில் வெற்றி பெற்ற காரணத்தினால் தான், காவிரி நதிநீர் பிரச்சினை வருகின்ற போது, நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து 23 நாட்கள், நாடாளுமன்ற அவை செயல்பட முடியாத அளவிற்கு உருவாக்கினார்கள். எனவே, பலம் பொருந்திய கட்சியாக இருந்த காரணத்தினாலே, அதிக எண்ணிக்கையிலே நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்ற காரணத்தினாலே, நம்முடைய கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்றத்தை முடக்க செய்தோம். அதன் மூலமாக நமக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கப்பெற்றது.

கேள்வி:- பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை(வாட்) தமிழகம் குறைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா? ஏனென்றால் விலை உயர்ந்துகொண்டே செல்கிறதே?

பதில்:- அதை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும். மாநில அரசு எப்படி குறைக்க முடியும்? மத்திய அரசுதான் உயர்த்திக் கொண்டே போகிறது. மாநில அரசு உயர்த்தவில்லை. இன்றைக்கு மாநிலத்தின் நிதி உங்களுக்கு நன்றாக தெரியும். இன்றைக்கு ஒவ்வொரு துறையிலும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து கொண்டிருக்கிறோம். தேவையான நிதி ஆதாரத்தை பெருக்குவதுதான் மாநில அரசினுடைய நிலை.

அப்படி நிதி ஆதாரத்தைப் பெருக்கினால்தான் துறையில் இருக்கின்ற திட்டங்களை எல்லாம் நிறைவேற்ற முடியும். போக்குவரத்துக்கழகத்தில் எவ்வளவு இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். அதையெல்லாம் சரி செய்ய வேண்டுமென்றால், அதற்குத் தேவையான நிதி தேவைப்படுகிறது. இருந்தாலும், மக்கள் வைக்கின்ற கோரிக்கைகளை எல்லாம் பரிசீலனை செய்யப்படும்.

கேள்வி:- பல்வேறு நிலைகளில் நீங்கள் மத்திய அரசோடு இணைந்து செயல்படுவதாக சொல் கிறீர்கள். ஆனால், தம்பித்துரை சி.பி.ஐ. ரெய்டுக்கு மத்திய அரசுதான் காரணம் என்கிறாரே?

பதில்:- அது அவருடைய கருத்தாக இருக்கலாம், அரசாங்கத்தினுடைய கருத்தல்ல. அரசாங்கத்தை பொறுத்தவரைக்கும், மத்திய அரசோடு இணக்கமான உறவிருந்தால் தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த முடியும். தேவையான நிதியை பெற்று, போடப்பட்ட திட்டங்களை நிறைவேற்ற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து ஓமலூரில் உள்ள புறநகர் மாவட்ட அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில், மாநகர் மாவட்ட மற்றும் புறநகர் மாவட்ட நிர்வாகிகளை தொகுதி வாரியாக சந்தித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், வருகிற பாராளுமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றியும், கூட்டு கமிட்டி அமைப்பது குறித்தும் கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

கூட்டத்தில், பாராளுமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தலுக்காக ஒன்றிய செயலாளர், நகர செயலாளர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. பின்னர் பொதுமக்களிடம் முதல்-அமைச்சர் மனு வாங்கினார். இந்த நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் பன்னீர்செல்வம், காமராஜ், எம்.எல்.ஏ.க்கள் ஜி.வெங்கடாசலம், செம்மலை, வெற்றிவேல், மனோன்மணி, சித்ரா, மருதமுத்து, சக்திவேல், மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், ஒன்றிய செயலாளர்கள் சித்தேஸ்வரன், அசோகன், பச்சியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை காமலாபுரம் விமான நிலையத்தில் கலெக்டர் ரோகிணி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் மாலை நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புறப்பட்டு சென்றார். வழியில், ஆட்டையாம்பட்டியில் வயதான பெண்கள் மற்றும் குழந்தைகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து திருச்செங்கோட்டில் நடந்த திருமண விழாவில் கலந்துகொண்டு அவர் மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அங்கிருந்து சென்னை புறப்பட்டு சென்றார்.


Next Story