விநாயகர் சதுர்த்தியையொட்டி அனுமதியின்றி பொதுஇடங்களில் சிலைகள் வைக்கக்கூடாது


விநாயகர் சதுர்த்தியையொட்டி அனுமதியின்றி பொதுஇடங்களில் சிலைகள் வைக்கக்கூடாது
x
தினத்தந்தி 11 Sep 2018 10:45 PM GMT (Updated: 11 Sep 2018 8:15 PM GMT)

விநாயகர் சதுர்த்தியையொட்டி அனுமதியின்றி பொதுஇடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கக்கூடாது என்று அறந்தாங்கியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

அறந்தாங்கி,

அறந்தாங்கியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் பஞ்சவர்ணம் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசுகையில், உரிய அனுமதியின்றி பொது இடங்களில் புதிதாக சிலைகள் வைத்து யாரும் வழிபாடு செய்யக்கூடாது. தண்ணீரில் கரையக்கூடிய பொருளால் செய்யப்பட்ட சிலைகளே அமைக்கப்பட வேண்டும். பள்ளிவாசல், தர்கா, கிறிஸ்தவ ஆலயம் முதலிய பிற மதத்தினரின் ஆலயங்கள் அருகே இல்லாதவாறு சிலைகள் அமைக்கப்பட வேண்டும்.

சிலைகள் நிறுவப்படும் இடம் தீப்பிடிக்காத வகையில் அமைந்திருக்க வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சிலைகளை அமைக்க வேண்டும், என்றார். கூட்டத்திற்கு தாசில்தார் கருப்பையா, இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அறந்தாங்கி உட்கோட்டத்திற்கு உட்பட்ட போலீசார், விநாயகர் சிலை அமைப்பாளர்கள் மற்றும் விழாக்குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் ஆலங்குடியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார் தலைமை தாங்கி பேசுகையில், விநாயகர் சிலைகள் கடந்த ஆண்டு நிறுவப்பட்ட இடங்களில் மட்டுமே அமைக்க வேண்டும். புதிய இடங்களில் சிலைகள் அமைக்கக்கூடாது. விநாயகர் சிலை ஊர்வலத்தில் வரும் வாகனங்களின் ஆவணங்கள் முறையாக இருக்க வேண்டும், என்றார்.

இதில் ஆலங்குடி தாசில்தார் ரெத்தினாவதி, ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) அய்யனார், போலீஸ் இன்ஸ்பெக்டர் வைத்தியநாதன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் ஆலங்குடி உட்கோட்டத்திற்கு உட்பட்ட செம்பட்டிவிடுதி, வடகாடு, கீரமங்கலம் போலீசார் மற்றும் விநாயகர் சிலை அமைப்பாளர்கள், விழாக் குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சட்டம், ஒழுங்கை பராமரிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசுகையில், விழா ஒருங்கிணைப்பாளர்கள் சிலை அமைப்பதற்கு பட்டா இடமாக இருப்பின் சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களிடமும், பொது இடமாக இருப்பின் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்தும் தடையில்லா சான்று பெற வேண்டும். சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையம், தீயணைப்பு நிலையத்திலும் தடையில்லா சான்று பெற வேண்டும்.

பொது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை வழிபாட்டிற்காக எந்த நாளில் வைக்கப்பட்டதோ அன்றில் இருந்து 5 நாட்களுக்குள் கரைக்க வேண்டும். சிலைகளை ஊர்வலமாக சென்று கரைப்பதற்கு குறிப்பிட்ட நாளில் போலீசாரால் பரிந் துரைக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே வாகனங்களில் கொண்டு செல்ல வேண்டும், என்றார். கூட்டத்தில் கந்தர்வகோட்டை தாசில்தார் ஆர முததேவசேனா, போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னர் மன்னன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story