மானிய விலையில் வேளாண் எந்திரங்களை வாங்குவது எப்படி?
மானிய விலையில் வேளாண் எந்திரங்களை வாங்குவது எப்படி? என்று மாவட்ட கலெக்டர் ஹரிகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து கோவை மாவட்ட கலெக்டர் ஹரிகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கோவை,
வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் வேளாண்மையை எந்திரமயமாக்கும் வகையில், நடப்பு ஆண்டில் மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்குதல் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்களை மானிய விலையில் அமைக்க கோவை மாவட்டத்தில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தில் 8 முதல் 70 குதிரை திறன் சக்தி வெளியேற்றும் திறன்கொண்ட டிராக்டர்கள், பவர் டிரில்லர், சுழல் கலப்பை, விசை களையெடுப்பான், வரப்பு அமைக்கும் கருவி, தட்டை வெட்டும் கருவி, விசை தெளிப்பான் உள்ளிட்ட பல்வேறு எந்திரங்கள், கருவிகளை மானிய உதவியுடன் வாங்கி பயன்பெறலாம்.
இதில், சிறு, குறு, ஆதி திராவிட, பழங்குடியின மற்றும் பெண் விவசாயிகளுக்கு 35 சதவீதம் முதல் 50 சதவீதம் வரையும், இதர விவசாயிகளுக்கு 25 சதவீதம் முதல் 40 சதவீதம் வரையும் மானியம் வழங்கப் படுகிறது. உயர் தொழில்நுட்ப அதிக விலை உள்ள எந்திரங்களை வாங்க அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
வேளாண் எந்திரங்களை மானியத்தில் பெற்றிட, முதலாவதாக விவசாயிகள் உழவன் செயலியில் தனது ஆதார் எண்ணுடன் பதிவு செய்ய வேண்டும். உடனே அவர்களது விண்ணப்பம் மத்திய அரசின் இணையதளத்தில் இணைக்கப்படும். வேளாண் கருவிகளை வாடகைக்கு விடும் மையங்கள் அமைக்கவும் மானியம் வழங்கப்படுகிறது.
ரூ.25 லட்சம் மதிப்புள்ள வாடகை மையங்கள் அமைக்க 40 சதவீத மானிய அடிப்படையில் அதிக பட்சமாக ரூ.10 லட்சம்வரை மானியம் வழங்கப்படும். இந்த திட்டத்துக்காக ரூ.1½ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் பெற வேளாண் பொறியியல் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story