விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவையில் பூக்கள் விலை உயர்வு


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவையில் பூக்கள் விலை உயர்வு
x
தினத்தந்தி 12 Sept 2018 3:15 AM IST (Updated: 12 Sept 2018 2:12 AM IST)
t-max-icont-min-icon

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.900-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கோவை,

பண்டிகை மற்றும் சுபமுகூர்த்த காலங்களில் பூக்களின் விலை அதிகரித்து காணப்படும். இந்த நிலை யில் விநாயகர் சதுர்த்தி விழா நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொது மக்கள், இந்து அமைப்புகள் சார்பில், வீடுகள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூக்களால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடைபெறும். எனவே கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பூ மார்க்கெட்டில் பூக்கள் வாங்க நேற்று பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பூக்கள் விலை உயர்ந்து காணப்பட்டது. இது குறித்து கோவை பூமார்க்கெட் வியாபாரிகள் சங்க கமிட்டி உறுப்பினர் அருண்சங்கர் கூறியதாவது:-

கோவை பூ மார்க்கெட்டுக்கு தினமும் மல்லிகை, ஜாதி மல்லி, முல்லை உள்பட பல்வேறு வகையான பூக்கள் 30 டன் முதல் 40 டன் வரை வருகின்றன. சுமார் ரூ.50 லட்சம் வரை வர்த்தகம் நடைபெறும். காரமடை, மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து மல்லிகைப்பூ, முல்லைப்பூ, மதுரை அருகே உள்ள நிலக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சம்பங்கி, செவ்வந்தி, மரிக்கொழுந்து, அரளி, துளசி உள்ளிட்டவை கொண்டு வரப்படுகின்றன.

துடியலூர் பகுதியில் இருந்து பட்டுப்பூ, சாதா ரோஜா, வாடாமல்லி, ஓசூர், ராயக்கோட்டை பகுதியில் இருந்து ரோஜா, செண்டுமல்லி, செவ்வந்தி பூக்கள் கொண்டு வரப்படுகிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் இருந்து சவுக்கு மர இலைகள் கொண்டு வரப்படுகிறது.

கோவையை பொறுத்தவரை பண்டிகை காலங்களில் பூக்களின் தேவை அதிகமாக இருக்கும். எனவே விலையும் உயரும். பூக்களின் வரத்தை பொறுத்து, காலை மற்றும் மதியம் ஆகிய இருவேளையும் விலை நிர்ணயம் செய்யப்படும். கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனையான மல்லிகைப்பூ நேற்று ரூ.900-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் கிலோ ரூ.150-க்கு விற்கப்பட்ட ஜாதி மல்லி ரூ.800-க்கும், ரூ.100-க்கு விற்கப்பட்ட சாமந்தி ரூ.300-க்கும், ரூ.80-க்கு விற்கப்பட்ட அரளி ரூ.300-க்கும், ரூ.100-க்கு விற்கப்பட்ட சம்பங்கி ரூ.600-க்கும், ரூ.160-க்கு விற்கப்பட்ட பட்டன் ரோஜா ரூ.300-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரம் ரூ.100-க்கு விற்கப்பட்ட 20 பூக்கள் கொண்ட ஒரு கட்டு மைசூர் ரோஜா தற்போது ரூ.250-க்கு விற்பனை செய்யப் பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோவையில் பழங்களின் விலையும் உயர்ந்து உள்ளது. ஆனாலும் தேவை இருந்ததால் ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யா உள்ளிட்ட பழ வகைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். கடந்த வாரம் கிலோ ரூ.150-க்கு விற்கப்பட்ட ஆப்பிள் நேற்று ரூ.200-க்கும், ரூ.100-க்கு விற்கப்பட்ட மாதுளை ரூ.150-க்கும், ரூ.40-க்கு விற்கப்பட்ட ஆரஞ்சு ரூ.60-க்கும், ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்ட கொய்யா ரூ.100-க்கும் விற்கப்பட்டன. இது போல் பூஜைக்கு தேவையான கொண்டக்கடலை, வெல்லம், தேங்காய் ஆகியவற்றின் விலையும் அதிகமாக இருந்தது. 

Next Story