லாரி டிரைவர்களை கத்தியால் குத்தி செல்போன் பறித்த 2 பேர் கைது


லாரி டிரைவர்களை கத்தியால் குத்தி செல்போன் பறித்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 12 Sept 2018 3:45 AM IST (Updated: 12 Sept 2018 2:28 AM IST)
t-max-icont-min-icon

எண்ணூர் கடற்கரை சாலையில் லாரி டிரைவர்களை கத்தியால் குத்தி செல்போன், பணத்தை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவொற்றியூர்.

சென்னை துறைமுகத்திற்கு சரக்குகளை ஏற்றி வரும் கன்டெய்னர் லாரிகளை எண்ணூர் கடற்கரை சாலையில் நிறுத்தி வைப்பது வழக்கம். இந்த நிலையில் வட மாநிலத்தை சேர்ந்த டிரைவர் தினேஷ் (வயது 40) என்பவர் திருவொற்றியூர் திருச்சிணாங்குப்பம் அருகே தான் ஓட்டி வந்த கன்டெய்னர் லாரியை நிறுத்தி விட்டு அதில் அமர்ந்து இருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள். டிரைவர் தினேஷ் வைத்திருந்த செல்போனை பறிக்க முயன்றனர். உடனே தினேஷ் அவர்களை தடுக்க முயன்றார். ஆனால் 2 வாலிபர்களும் தினேசின் காலில் கத்தியால் குத்தி விட்டு அவர் வைத்திருந்த செல்போன் மற்றும் ஆயிரம் ரூபாயை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டனர்.

2 பேர் கைது

இதற்கிடையே வலியால் துடித்த தினேஷ் ரோந்து சென்ற திருவொற்றியூர் போலீசாரிடம் நடந்த சம்பவம் பற்றி கூறினார். உடனே போலீசார் வாலிபர்களை தேடினர். அப்போது சிறிது தூரத்தில் மற்றொரு கன்டெய்னர் லாரியில் இருந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் முருகேசன் (29) என்பவரை கத்தியால் குத்தி விட்டு அவரிடம் இருந்து செல்போன் மற்றும் 800 ரூபாயை வாலிபர்கள் பறித்தனர்.

போலீசாரை பார்த்ததும் வழிப்பறி திருடர்கள் தப்பி ஓட முயன்றனர். ஆனால் போலீசார் துரத்திச்சென்று தாங்கல் தியாகராயபுரம் அருகே வாலிபர் ஒருவரை மட்டும் பிடித்தனர். மற்றொரு வாலிபர் தப்பி ஓடி விட்டார்.

விசாரணையில் பிடிபட்ட வாலிபர் திருவொற்றியூர் நேதாஜி நகரைச் சேர்ந்த ராம்குமார் (29) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த மதன் (23) என்பவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று திருவொற்றியூர் கடற்கரை பகுதியில் பதுங்கி இருந்த மதனை பிடித்து கைது செய்தனர்.

Next Story