புதிய கட்டளை மேட்டு கால்வாயில் கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும்


புதிய கட்டளை மேட்டு கால்வாயில் கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும்
x
தினத்தந்தி 11 Sep 2018 10:30 PM GMT (Updated: 11 Sep 2018 9:09 PM GMT)

ஏரிகள் நிரம்ப வசதியாக புதிய கட்டளை மேட்டு கால்வாயில் கூடுதலாக தண்ணீரை திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியத்தில் உள்ள செங்கிப்பட்டி பகுதியில் ஏரிகள் மூலமாக விவசாய பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்கிறது. இந்த பகுதியில் உள்ள புதுக்குடி தொடங்கி செல்லப்பன்பேட்டை வரை காணப்படும் புதியகட்டளை மேட்டு கால்வாய் மூலமாக ஏரிகள் நிரம்பும்.

புதிய கட்டளை மேட்டு கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு 20 நாட்கள் ஆன பின்னரும் செங்கிப்பட்டி பகுதியில் உள்ள ஏரிகள் முழு அளவு நிரம்பவில்லை. திருமலை சமுத்திரம் ஏரி, பூதலூர் செல்லப்பன்பேட்டை ஏரி ஆகிய ஏரிகள் வறண்டு கிடக்கின்றன. ஒரு சில ஏரிகளுக்கு தற்போது தான் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் ஏரிகள் அனைத்தும் நிரம்ப வசதியாக புதிய கட்டளை மேட்டு கால்வாயில் கூடுதலாக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய கட்டளை மேட்டு கால்வாயில் இருந்து தண்ணீர் கிளை வாய்க்கால்களில் பாயவில்லை என்றும், பூதலூர் அருகே புதுப்பட்டி பகுதியில் புதிய மேட்டு கட்டளை கால்வாய் தண்ணீர் இன்றி காணப்படுவதாகவும் விவசாயிகள் விரக்தியுடன் கூறுகிறார்கள்.

இதுகுறித்து பூதலூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் ராமச்சந்திரன் கூறியதாவது:-

மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரில் பெருமளவு, கொள்ளிடம் வழியாக கடலில் வீணாக கலக்கிறது. அதிகாரிகளின் அலட்சியப்போக்கால் செங்கிப்பட்டி பகுதியில் உள்ள ஏரிகள் நிரம்பாமல், இப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து துயரத்தை சந்தித்து வருகிறார்கள்.

புதிய கட்டளை மேட்டு கால்வாயில் பொய்கைகுடி தலைப்பில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விட வேண்டும். இதன் மூலம் கால்வாயின் கடைமடை பகுதியில் உள்ள திருமலைசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகளை நிரப்ப வேண்டும்.

கால்வாயின் தலைப்பு பகுதியாக உள்ள புதுக்குடி, மனையேரிப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள ஏரிகளுக்கு மட்டுமே தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தால் கடை மடை பகுதி முழுவதும் பாதிக்கப்படும்.

அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட்டு புதிய கட்டளை மேட்டு கால்வாய் மூலம் தண்ணீர் பெறும் அனைத்து ஏரிகளையும் நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story