தாம்பரம் ரெயில் நிலையத்தில் 60 சவரன் நகைகளுடன் பையை, பெண் பயணி தவற விட்டார் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மீட்டு ஒப்படைத்தனர்
தாம்பரம் ரெயில் நிலையத்தில் பெண் பயணி ஒருவர் 60 சவரன் நகைகளுடன் பையை தவற விட்டார். அதை ரெயில்வே பாதுகாப்பு படையினர் மீட்டு ஒப்படைத்தனர்.
தாம்பரம்,
சென்னையை அடுத்த சேலையூர் அருகேயுள்ள செம்பாக்கம் ராணி ரெசிடென்சி பகுதியை சேர்ந்தவர் ஜெபவேல்ராஜ் (வயது 32). இவர் நேற்று முன்தினம் இரவு நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் திருநெல்வேலி செல்வதற்கு மனைவியுடன் தாம்பரம் ரெயில் நிலையம் வந்தார். அங்கு 7-ம் எண் பிளாட்பாரத்தில் வந்த அந்த ரெயிலில் அவசரமாக ஏறும்போது, ஜெபவேல்ராஜின் மனைவி 60 சவரன் நகைகளுடன் வைத்திருந்த கைபையை தவற விட்டு விட்டார்.
ரெயிலில் ஏறிய உடன் மனைவி நகைகளுடன்கூடிய கைபையை தவற விட்ட விஷயம் தெரிந்து, ஜெபவேல்ராஜ் உடனே ரெயில்வே பாதுகாப்பு படை அவசர உதவி எண் 182-ல் தகவல் சொன்னார்.
மீட்டு ஒப்படைப்பு
அதற்குள் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் பையை பாதுகாப்பாக எடுத்து தாம்பரம் ரெயில்வே பாதுகாப்பு படை நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
அந்த பையில் 60 சவரன் தங்க நகைகள், ரூ.2,560, செல்போன் ஏடிஎம் கார்டுகள், விலை மதிப்புள்ள ஆவணங்கள் இருந்தன.
இந்த நிலையில் பையை தேடி வந்த ஜெபவேல்ராஜ் தம்பதியரிடம் தாம்பரம் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் பையை ஒப்படைத்தனர். ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு நன்றி கூறி அவர்கள் நகை பையை பெற்று சென்றனர்.
Related Tags :
Next Story