தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கு


தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கு
x
தினத்தந்தி 11 Sep 2018 9:30 PM GMT (Updated: 11 Sep 2018 9:16 PM GMT)

திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜராகிவிட்டு சென்றபோது, கூலித்தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல், 


சித்தையன்கோட்டை அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 38). கூலித்தொழிலாளி. இவர், மதுரை அருகே உள்ள கறிக்குளத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சித்தையன்கோட்டையை சேர்ந்த ஜமால் முகமது என்பவரை கொலை செய்ததாக, செல்வக்குமார் மீது வழக்கு உள்ளது. இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்தநிலையில் கடந்த ஜூலை மாதம் 31-ந்தேதி வழக்கு விசாரணைக்காக திண்டுக்கல் கோர்ட்டில் செல்வக்குமார் உள்பட 3 பேர் ஆஜராகிவிட்டு, ஒரு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்றுகொண்டு இருந்தனர். திண்டுக்கல்லை அடுத்த குட்டியப்பட்டி பிரிவு நான்கு வழிச்சாலையில் சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது காரை மோதவிட்டு, செல்வக்குமாரை ஒரு கும்பல் வெட்டிக்கொலை செய்தது.

இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து சித்தையன்கோட்டையை சேர்ந்த கலீல்ரகுமான் (35), முகமது காலித் (23), முகமது சலீம் (30), கடலூர் மாவட்டம் திருப்பாப்புலியூர் பகுதியை சேர்ந்த சமீர் அலி (28) ஆகியோர் உள்பட 6 பேரை கைது செய்தனர். இதையடுத்து அவர்கள் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் கலீல் ரகுமான், முகமது காலித், முகமது சலீம், சமீர் அலி ஆகிய 4 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் டி.ஜி.வினய் உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் 4 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

Next Story