ஊர்வலத்தின்போது விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை
விநாயகர் சதுர்த்தியையொட்டி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 1,200 சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஊர்வலத்தின்போது விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் கூறினார்.
திண்டுக்கல்,
நாடு முழுவதும் நாளை (வியாழக்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அதன்படி தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா நடக்கிறது. இதையொட்டி பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுவது வழக்கம். இதையடுத்து அந்த சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று ஆறு, குளம், ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.
பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலை அதிகபட்சமாக 10 அடி உயரம் தான் இருக்க வேண்டும். சிலை வைப்பது தனியார் நிலமாக இருந்தால் அதன் உரிமையாளரிடமும், பொது இடமாக இருந்தால் ஊராட்சி நிர்வாகத்திடமும், சிலை வைக்கும் பகுதியில் மின்சாரம் பயன்படுத்தினால், மின்வாரியத்திடம் தடையில்லா சான்று பெற வேண்டும். இதையடுத்து அவற்றை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் கொடுத்து அனுமதி பெற்று தான் சிலை வைக்க வேண்டும்.
இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு சக்திவேலிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
இந்த ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இருந்து பொதுமக்கள், பல்வேறு அமைப்புகள் சார்பில் சுமார் 1,500 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி கோரப்பட்டது. அதில் 1,200 சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு புதிதாக நிறைய பேர் சிலை வைக்க அனுமதி கேட்டனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தையொட்டி மாவட்டம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது போலீசார் அனுமதித்துள்ள வழியாகத்தான் செல்ல வேண்டும். கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகளின் அருகில் செல்லும் போது கோஷம் போடக்கூடாது. பிற மதத்தினர், சாதியினரின் உணர்வுகளை தூண்டும் வகையிலும் கோஷம் போடக்கூடாது. சாதிய ரீதியிலான உடைகளை அணியக்கூடாது. ஊர்வலத்தின்போது பட்டாசு வெடிக்கக்கூடாது. ஊர்வலத்தில் ஒரே ஒரு ஒலிபெருக்கியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்தக்கூடாது. அனுமதி பெற்றுதான் பேனர்களை வைக்க வேண்டும். சிலையை ஊர்வலமாக கொண்டு சென்ற உடனே அந்த பேனர்களை அப்புறப்படுத்த வேண்டும். இந்த விதிகளை மீறினால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story