செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Sep 2018 10:45 PM GMT (Updated: 11 Sep 2018 9:45 PM GMT)

மூவர்கோட்டை கூட்டுறவு சங்கத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வடுவூர்,

திருவாரூர் மாவட்டம் வடுவூர் அருகே மூவர்கோட்டையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பல லட்ச ரூபாய் முறைகேடு செய்த, அந்த சங்கத்தின் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூவர்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விவசாய சங்க தலைவர் தெட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் முறைகேடு செய்த கூட்டுறவு சங்க செயலாளர் மீதும், அவருக்கு துணைபோன அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப் பாட்டத்தை தொடர்ந்து மன்னார்குடி கூட்டுறவுத்துறை சார்பதிவாளர் தியாக ராஜனிடம் விவசாயிகள், முறைகேடு தொடர்பாக புகார் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட சார்பதிவாளர் தியாகராஜன், விவ சாயிகளிடம் கூறியதாவது:-

கூட்டுறவுத்துறை அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட விசாரணையில் மூவர்கோட்டை கூட்டுறவு சங்கத்தில் செயலாளராக பணியாற்றியவர், ரூ.33 லட்சத்து 80 ஆயிரம் முறைகேடு செய்து இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. சங்க உறுப்பினர்களுடைய பணம் கண்டிப்பாக மீட்டு தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story