திருவாரூரில், கருகும் நிலையில் சம்பா பயிர்கள் விவசாயிகள் விரக்தி


திருவாரூரில், கருகும் நிலையில் சம்பா பயிர்கள் விவசாயிகள் விரக்தி
x
தினத்தந்தி 12 Sept 2018 4:00 AM IST (Updated: 12 Sept 2018 3:22 AM IST)
t-max-icont-min-icon

ஆறுகளில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால், திருவாரூரில் சம்பா பயிர்கள் கருகும் நிலையில் உள்ளன. இதனால் விவசாயிகள் விரக்தி அடைந்து உள்ளனர்.

திருவாரூர்,

தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்கள் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழ்கின்றன. இதில் திருவாரூர் மாவட்டம் உணவு உற்பத்தியில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இந்த ஆண்டு மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படாததால், திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது. நிலத்தடி நீரை பயன்படுத்தி ஒரு சில இடங்களில் மட்டும் விவசாயிகள் குறுவை சாகுபடியை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை கொட்டி தீர்த்ததால், அங்குள்ள அணைகளில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணை வேகமாக நிரம்பியது. கடந்த ஜூலை மாதம் 19-ந் தேதி மேட்டூர் அணை, டெல்டா மாவட்ட விவசாய பாசனத்துக்காக திறந்து விடப்பட்டது. மேட்டூர் அணை தண்ணீரை நம்பி திருவாரூர் மாவட்ட விவசாயிகள் இந்த ஆண்டு சம்பா பயிர் சாகுபடி செய்தனர்.

விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆனால் ஆறுகளில் இருந்து பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர் செல்லாததால் சம்பா சாகுபடி பணிகளுக்கு தேவையான தண்ணீர் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் முக்கொம்பு அணையில் உடைப்பு ஏற்பட்டதால் டெல்டா மாவட்டங்களுக்கான பாசனத்துக்கு தண்ணீர் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.

திருவாரூர் மாவட்ட ஆறுகளுக்கு வழங்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது. இதன் காரணமாக திருவாரூரில் உள்ள ஓடம்போக்கி, பாண்டவையாறு உள்ளிட்ட ஆறுகள் தற்போது வறண்டு கிடக்கின்றன. இந்த ஆறுகளில் புல் செடிகள் முளைத்து, கால்நடைகளுக்கு மேய்ச்சல் களமாக ஆறுகள் மாறி வருகிறது.

ஆறுகள் வறண்டதால் சம்பா பயிரிடப்பட்ட வயல்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல், வயல்கள் வறண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. திருவாரூர் பகுதியில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா பயிர்கள் கருகும் நிலையில் உள்ளன. இதன் காரணமாக ஆற்று பாசனத்தை நம்பி சம்பா பயிரிட்ட விவசாயிகள் விரக்தியில் உள்ளனர். சம்பா பயிர்களை பாதுகாக்க திருவாரூர் மாவட்ட ஆறுகளுக்கு தேவையான தண்ணீரை முறை வைக்காமல் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story