கோவில்பட்டியில் பரபரப்பு மயக்க மருந்தை பயன்படுத்தி பெண்களிடம் 12 பவுன் நகை பறிப்பு
கோவில்பட்டியில் மயக்க மருந்தை பயன்படுத்தி 2 பெண்களிடம் 12 பவுன் நகை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் மயக்க மருந்தை பயன்படுத்தி 2 பெண்களிடம் 12 பவுன் நகை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
ஆஸ்பத்திரிக்கு சென்ற மூதாட்டி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தனுஷ்கோடியாபுரம் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். இவருடைய மனைவி சீதாலட்சுமி (வயது 75). வெங்கடாசலம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். நேற்று முன்தினம் சீதாலட்சுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. எனவே அவர் கோவில்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஆட்டோவில் வந்த மர்மநபர், சீதாலட்சுமியை நன்கு தெரிந்தவர் போன்று, அவரிடம் பேச்சு கொடுத்தார்.
பின்னர் அவர், சீதாலட்சுமியை தனது ஆட்டோவில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாக கூறி, ஏற்றிச் சென்றார். அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லாமல், மற்றொரு ஆஸ்பத்திரிக்கு செல்வோம் என்று கூறி ஆட்டோவில் ஏற்றினார்.
மயக்க மருந்து...
சீதாலட்சுமி ஆட்டோவில் ஏறியவுடன் அவரது முகத்தில் அந்த நபர் மயக்கமருந்தை தூவினார். இதனால் மயங்கி விழுந்த சீதாலட்சுமியின் கழுத்தில் கிடந்த 8 பவுன் தங்க சங்கிலியை அந்த நபர் பறித்து கொண்டு, சீதாலட்சுமியை ஆட்டோவில் ஏற்றிய இடத்திலேயே இறக்கி விட்டு தப்பிச் சென்றார்.
சீதாலட்சுமி மயங்கி கிடந்ததைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சைக்கு பின்னர் நேற்று மயக்கம் தெளிந்தது. அப்போது அவர் தன் மீது ஆட்டோ டிரைவர் மயக்க மருந்து தூவி நகை பறித்து சென்றதை தெரிவித்தார்.
மற்றொரு சம்பவம்
இதேபோன்று கோவில்பட்டி அருகே உள்ள ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்தவர் வள்ளியம்மாள் (65). உடல்நலம் பாதிக்கப்பட்ட இவர் நேற்று முன்தினம் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காக சென்றார். அப்போது அங்கு வந்த மர்மநபர், வள்ளியம்மாளை ஏற்கனவே நன்கு தெரிந்தவர் போன்று பேச்சு கொடுத்தார். பின்னர் அவர், வள்ளியம்மாளுக்கு டீ வாங்கி தருவதாக கூறி, அருகில் உள்ள டீக்கடைக்கு அழைத்து சென்றார். அங்கு அவர் டீயில் மயக்க மருந்து கலந்து வள்ளியம்மாளுக்கு குடிக்க கொடுத்தார்.
பின்னர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த வள்ளியம்மாளின் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை மர்மநபர் பறித்து சென்றார். வள்ளியம்மாள் மயங்கி கிடந்ததைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை கோவில்பட்டி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து வள்ளியம்மாளின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விசாரணை
நேற்று மயக்கம் தெளிந்த வள்ளியம்மாள் தனக்கு டீயில் மயக்க மருந்து கலந்து குடிக்க கொடுத்து, தங்க சங்கிலியை மர்மநபர் பறித்து சென்றதை தெரிவித்தார். இதுகுறித்த புகார்களின் பேரில், கோவில்பட்டி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தினர். பெண்களிடம் நகை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story