அரசு வேளாண் கல்லூரியில் தேர்தல் கல்விக்குழு தொடக்கம்


அரசு வேளாண் கல்லூரியில் தேர்தல் கல்விக்குழு தொடக்கம்
x
தினத்தந்தி 11 Sep 2018 10:54 PM GMT (Updated: 11 Sep 2018 10:54 PM GMT)

காரைக்காலை அடுத்த செருமாவிளங்கையில் உள்ள அரசு வேளாண் கல்லூரியில் தேர்தல் கல்விக்குழு தொடங்கப்பட்டு தேர்தல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

காரைக்கால்,
 
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் கந்தசுவாமி தலைமை தாங்கினார். தேர்தல் கல்விக்குழுவை திருநள்ளாறு தாசில்தார் முத்து தொடங்கி வைத்தார். மாணவர்கள் வாக்குச்சாவடி அல்லது தாலுகா அலுவலகத்திற்குச் சென்று எவ்வாறு வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்க விண்ணப்பிப்பது என்று விளக்கி கூறினார். மேலும் www.nvsp.in என்ற இணையதளம் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்பதையும் விளக்கினார். வேளாண் கல்லூரி பேராசிரியரும், மாநில தேர்தல் கல்விக்குழு பயிற்சியாளருமான மோகன் வாக்குப்பதிவின் முக்கியத்துவம், வாக்காளர் இணையதள பதிவுமுறை உள்ளிட்ட செய்முறை பயிற்சி அளித்து மாணவ, மாணவிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்துகொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வும், அதற்கு எப்படி இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்பது பற்றியும் மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

முன்னதாக கல்லூரியின் தேர்தல் கல்விக்குழு ஒருங்கிணைப்பாளர் மற்றும் தேசிய மாணவர் படை அதிகாரியுமான லெப்டினன்ட் பாண்டியன் அனைவரையும் வரவேற்றார். முடிவில் நாட்டுநலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயசிவராஜன் நன்றி கூறினார்.

Next Story