அனத்தலை ஆற்றில் தொடரும் மணல் திருட்டு


அனத்தலை ஆற்றில் தொடரும் மணல் திருட்டு
x
தினத்தந்தி 11 Sep 2018 10:58 PM GMT (Updated: 11 Sep 2018 10:58 PM GMT)

ராஜபாளையம் அனத்தலை ஆற்றில் தொடர்ச்சியாக மாட்டு வண்டிகளிலும், டிராக்டர்களிலும் மணல் திருட்டு நடப்பதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

ராஜபாளையம்,


ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள கல்லாறு மற்றும் பாலாறு ஆகிய இடங்களில் உற்பத்தியாகும் தண்ணீர், மலையடிவாரத்தில் உள்ள அனத்தலை ஆற்றுக்கு வரும். இந்த ஆறு வழியாக வாழைக்குளம், ஆதியூர், புளியங்குளம், பிரண்டை குளம், செங்குளம், கொண்டனேரி உள்ளிட்ட 10 கண்மாய்களுக்கு செல்லும். இந்த கண்மாய்களை நம்பி நெல், பருத்தி, புளி மற்றும் காய்கறிகள் விளையும் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.

மேலும் ஆறு வரும் வழித் தடங்களில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் தென்னை, மாந்தோப்புகள் உள்ளன. இந்த அனத்தலை ஆற்றில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக மணல் திருட்டு நடப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். காலை நேரங்களில் சுமார் 20 மாட்டு வண்டிகளிலும், இரவில் 30- க்கும் மேற்பட்ட டிராக்டர்களிலும் தொடர்ந்து மணல் திருடப்படுகிறது.

இதனால் ஆறு முழுவதும் ஆங்காங்கே குழிகள்ஏற்பட்டுள்ளன. மலையில் இருந்து வரும் தண்ணீர் இதில் தேங்கி விடுவதால் கண்மாய்களுக்கு முழுமையான தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் விவசாய பணிகள் பாதிக்கப்படுவதுடன், நிலத்தடிநீர் மட்டமும் வெகுவாக குறைகிறது. கிணறுகள் வறண்டு தென்னை மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. தென்னை மரங்களை காப்பாற்ற இயலாத நிலை உள்ளது.

மணல் திருட்டை தடுக்க, செண்பக தோப்பு சாலையில் உள்ள தனியார் பள்ளி முன்பாக சோதனைச் சாவடி அமைக்கப்பட்டது. இந்த சோதனைச் சாவடி பெரும்பாலான நேரங்களில் ஆள் இல்லாமல் செயல்படாமல் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதனால் மணல் கொள்ளையர்கள் தைரியமாக மணலை திருடிச் செல்வதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ள விவசாயிகள், தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு அனத்தலை ஆற்றில் நடக்கும் மணல் திருட்டை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

Next Story