புனித ஹஜ் பயணத்தை முடித்துக்கொண்டு 341 பேருடன் முதல் விமானம் சென்னை வந்தது


புனித ஹஜ் பயணத்தை முடித்துக்கொண்டு 341 பேருடன் முதல் விமானம் சென்னை வந்தது
x
தினத்தந்தி 13 Sept 2018 4:15 AM IST (Updated: 13 Sept 2018 12:10 AM IST)
t-max-icont-min-icon

புனித ஹஜ் பயணத்தை முடித்துக்கொண்டு 341 பேருடன் முதல் விமானம் சென்னை வந்தது.

சென்னை

புனித ஹஜ் பயணத்தை முடித்துக்கொண்டு 341 பேருடன் முதல் விமானம் சென்னை வந்தது.

உலகத்தில் உள்ள இஸ்லாமியர்கள் தங்கள் 5 கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் பயணத்தை நிறைவேற்ற புனித மெக்கா நகருக்கு ஆண்டுதோறும் துல்ஹஜ் மாதத்தில் பயணம் செய்வார்கள். இந்த ஆண்டு புனித ஹஜ் பயணத்துக்காக தமிழ்நாடு ஹஜ் கமிட்டி மூலமாக 3,829 பேர் கடந்த ஜூலை மாதம் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்றனர்.

புனித ஹஜ் பயணத்தை முடித்துக்கொண்டு ஹாஜிகளுடன் முதல் விமானம் நேற்று மதியம் சென்னை திரும்பியது. இதில் ஒரு குழந்தை மற்றும் 167 பெண்களுடன் 341 பேர் வந்தனர்.

புனித பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பியவர்களை தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் ஜப்பார், மாநில ஹஜ் கமிட்டி செயலாளர் முகமது நசிமுத்தின், தமிழக பிற்படுத்தபட்டோர் நலத்துறை செயலாளர் கார்த்திக் ஆகியோர் விமான நிலையத்தில் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

பின்னர் தமிழக ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் ஜப்பார், நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழகத்தில் இருந்து சென்று புனித ஹஜ் கடமையை நிறைவேற்றியவர்களுக்கு ஹஜ் மானிய தொகையை வழங்கிய தமிழக முதல்–அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஆண்டு புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற அனைத்து வகையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தது. ஹஜ் பயணம் முடித்துவிட்டு திரும்பியவர்கள் சிறு சிறு குறைகளை தெரிவித்தனர். வருங்காலத்தில் அவை சரி செய்யப்படும்.

ஹஜ் பயணத்துக்கு தமிழகத்துக்கு கூடுதல் இடஒதுக்கீடுகள் வழங்கும்படி கேட்டு பிரதமருக்கு முதல்–மைச்சர் கடிதம் எழுதி உள்ளார். கூடுதல் இடங்களை மத்திய ஹஜ் குழுதான் ஒதுக்க வேண்டும். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகமான ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. வரும் ஆண்டிலும் கூடுதல் இடங்கள் ஒதுக்க முதல்–அமைச்சர் நடவடிக்கை எடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஹஜ் பயணம் முடித்து சென்னை திரும்பிய முகமது அலி என்பவர் கூறும்போது, ‘‘நாங்கள் புனித ஹஜ் பயணத்தை எந்த சிரமும் இன்றி முடித்து வர தமிழக அரசும், தமிழக ஹஜ் கமிட்டியும் சிறப்பான வசதிகளை செய்து கொடுத்தனர். அவர்களுக்கு எங்கள் நன்றி’’ என்றார்.

Next Story