உடுப்பியில் மழை சேதங்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்


உடுப்பியில் மழை சேதங்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்
x
தினத்தந்தி 13 Sept 2018 3:30 AM IST (Updated: 13 Sept 2018 12:17 AM IST)
t-max-icont-min-icon

உடுப்பியில் மழை சேதங்களை நேற்று மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

மங்களூரு, 

உடுப்பியில் மழை சேதங்களை நேற்று மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

மழையால் பாதிப்பு

கர்நாடகத்தில் கடந்த மே மாதம் இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இந்த மழையால் கர்நாடக கடலோர மாவட்டங்களாக தட்சிண கன்னடா, உடுப்பி, மலைநாடுகள் குடகு, சிக்கமகளூரு, ஹாசன் உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக குடகு, தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களில் மக்கள் தங்கள் வீடுகளை இழந்து பரிதவித்தனர்.

இந்த நிலையில், கர்நாடக முதல்-மந்திரி சமீபத்தில் டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்து, மழை வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தக்க நிவாரணம் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய குழுவினரை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மத்திய குழுவினர் ஆய்வு

இந்த நிலையில், கர்நாடகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக மத்திய குழுவினர் நேற்று உடுப்பிக்கு வந்தனர். அவர்கள், உடுப்பி, கார்கலா, காபு, குக்கந்தூர், மியார், உஸ்மார், ஈது, நூரல்பெட்டு உள்ளிட்ட மழைவெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அவர்களுடன் மாவட்ட கலெக்டர் பிரியங்கா மேரி பிரான்சிஸ், வருவாய் துறை அதிகாரிகள் சென்று, மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை காண்பித்தனர். மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தபோது, அந்தப்பகுதி மக்கள் தங்கள் குறைகளை அவர்களிடம் தெரிவித்தனர். இதனை கேட்டறிந்து கொண்ட அவர்கள், இதுதொடர்பாக மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

ஆலோசனை

இதையடுத்து மத்திய குழுவினர் உடுப்பி அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுத்துக் கொண்டனர். பின்னர் மாலையில் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன், மத்திய குழுவினர் அரசு விருந்தினர் மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள்.

இதில், மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து அதிகாரிகள், மத்திய குழுவினரிடம் தெரிவித்தனர்.

Next Story