தாலி கட்டும் நேரத்தில் திருமணத்திற்கு மறுத்த மணமகள்: மணமகன் வீட்டினர் அதிர்ச்சி
தஞ்சையில், தாலிகட்டும் நேரத்தில் திருமணத்திற்கு மணமகள் மறுப்பு தெரிவித்து, காதலித்த வாலிபரை கரம்பிடிக்க விரும்புவதாக கூறியதால் மணமகன் வீட்டினர் அதிர்ச்சி அடைந்தனர்.
தஞ்சாவூர்,
தஞ்சையை சேர்ந்த கலைத்தட்டு உற்பத்தியாளர் ஒருவருக்கும், தஞ்சையை அடுத்த வல்லம் பகுதியை சேர்ந்த பட்டதாரி பெண் ஒருவருக்கும் திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. இந்த திருமணம் தஞ்சையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெறுவதாக இருந்தது.
இதனால் இருவீட்டினரும் மண்டபத்திற்கு வந்து இருந்தனர். நேற்று காலை திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று கொண்டு இருந்தது. முகூர்த்த நேரம் நெருங்கியதும் மணமக்களின் உறவினர்கள் அனைவரும் இந்த திருமண நிகழ்ச்சியை காண்பதற்காகவும், மணமக்களை அட்சதை தூவி வாழ்த்துவதற்காகவும் மண்டபத்தில் மணமேடையின் முன்பு வந்து அமர்ந்தனர்.
தாலி கட்டும் நேரம் நெருங்கியதும் பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்தபடி மணமகன் மணமேடைக்கு வந்து அமர்ந்தார். இன்னும் சில வினாடிகளில் தங்களது திருமணம் நடந்தேறும். அதன்பின்னர் தங்கள் மணவாழ்க்கையை எப்படியெல்லாம் அமைத்துக்கொள்ளப்போகிறோம் என்ற கற்பனையில் சிறகடித்து பறந்தபடி அமர்ந்து இருந்தார். தான் கரம்பிடிக்க போகும் மணமகள் மேடைக்கு எப்போது வருவார் என்று அவரது வருகைக்காக வழிமேல் விழிவைத்து காத்து இருந்தார்.
ஆனால் நீண்டநேரமாகியும் மணமகள், மணமேடைக்கு வரவில்லை. இதனால் திருமணத்திற்கு வந்த மணமக்களின் உறவினர்கள் அனைவரும் மணமகள் ஏன் இன்னும் வராமல் இருக்கிறார்? என்ற கேள்வியை எழுப்பியபடி அமர்ந்து இருந்தனர். முகூர்த்த நேரம் முடிவடையும் நேரம் நெருங்கிக்கொண்டு இருந்ததால், மணமகள் அறைக்கு மணமகன் வீட்டினர் சென்று பார்த்தனர். அப்போது, பட்டுப்புடவையை கூட கட்டாமல், திருமணத்திற்கு தயாராகாமல் மணமகள் அமர்ந்து இருந்தது தெரிய வந்தது.
இதனைத்தொடர்ந்து ஏன் இன்னும் தயாராகவில்லை என்று அந்த பெண்ணிடம் விசாரித்தனர். அப்போது அந்த பெண் தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும், மீறி இந்த திருமணம் நடந்தால் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் கூறினார். அவர் கூறிய பதிலை கேட்டு மணமகன் மற்றும் மணமகளின் பெற்றோர் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இருவீட்டினரும் அந்த பெண்ணிடம் நீண்ட நேரம் பேசிப்பார்த்தும் அந்த பெண் இந்த திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் இரு வீட்டினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திருமணத்திற்கு மணமகள் மறுப்பு தெரிவித்த தகவலால் திருமண மண்டபமே பரபரப்புக்குள்ளானது. திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் ஆளாளுக்கு ஒன்று பேச ஆரம்பித்து விட்டனர்.
இந்த நிலையில் இதுகுறித்து போலீசாருக்கு யாரோ தகவல் தெரிவித்து விட்டனர். தகவல் அறிந்து தஞ்சை மேற்கு போலீசார் மண்டபத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது போலீசாரிடமும் தனக்கு இந்த திருமணம் வேண்டாம் என்பதில் மணமகள் உறுதியாக கூறி விட்டார். இதனால் வேறு வழியின்றி இந்த திருமணத்துக்கு செலவு செய்யப்பட்ட தொகையை மணமகள் வீட்டினர் தர வேண்டும் என்று மணமகன் தரப்பினர் வலியுறுத்தினர். இதனால் திருமண மண்டபத்தில் இரு வீட்டினருக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது.
பின்னர் இருவீட்டினரையும் போலீசார், மேற்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்டநேர பேச்சுவார்த்தைக்கு பிறகு இருவீட்டினரும் அமைதியாக செல்வதாக கூறி கலைந்து சென்றனர்.
இது குறித்து போலீசார் கூறும்போது, திருமணத்திற்கு மறுத்த பட்டதாரி பெண், தஞ்சையில் உள்ள ஒரு கொரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவர் ஒரு வாலிபரை காதலிப்பதாகவும் அந்த வாலிபரை கரம்பிடிக்க விரும்புவதாகவும் கூறினார். 45 நாட்களுக்கு முன்பே திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இவ்வளவு நாள் பொறுமையாக இருந்துவிட்டு திருமண நாளன்று திருமணத்திற்கு விருப்பம் இல்லை என்று கூறியதை மணமகன் வீட்டினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
திருமண செலவுதொகை ரூ.3 லட்சம் கொடுக்க வேண்டும் என்று மணமகன் வீட்டினர் தெரிவித்தனர். அவ்வளவு தொகை கொடுக்க முடியாது என மணமகளின் பெற்றோர் தெரிவித்தனர். பின்னர் தங்களால் முடிந்த அளவு செலவு தொகை தருவதாக கூறியதால் அவர்களுக்குள் சமரசம் ஆனது. திருமணம் நின்றதால் அந்த மாப்பிள்ளைக்கு உடனடியாக வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அந்த முயற்சி கைகூடாததால் திருமணம் நின்றுவிட்டது என்றனர்.
திருமணம் நின்றதால் மணமகன் வீட்டினர் சேகமாக மண்டபத்தில் இருந்து வெளியேறினர். திருமணத்திற்காக களைகட்டி இருந்த மண்படம் திருமணம் நின்று போனதால் களைஇழந்து காணப்பட்டது. திருமணத்திற்காக வந்து இருந்த உறவினர்கள் அனைவரும் சோகத்துடன் திருமண மண்டபத்தை விட்டு வெளியேறினர். திருமணத்திற்காக தயார் செய்யப்பட்ட உணவு வகைகள் அனைத்தும் அப்படியே இருந்தன.