சாலையோரம் தோண்டப்பட்ட மழைநீர் கால்வாய்க்குள் இரு சக்கர வாகனத்துடன் தவறி விழுந்த வாலிபர்


சாலையோரம் தோண்டப்பட்ட மழைநீர் கால்வாய்க்குள் இரு சக்கர வாகனத்துடன் தவறி விழுந்த வாலிபர்
x
தினத்தந்தி 12 Sep 2018 7:36 PM GMT (Updated: 12 Sep 2018 7:36 PM GMT)

மாங்காட்டில் மழைநீர் கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இரு சக்கர வாகனத்துடன் தவறி விழுந்த வாலிபர் படுகாயம் அடைந்தார்.

பூந்தமல்லி,

காஞ்சீபுரம் மாவட்டம்  மாங்காடு அருகே உள்ள கோவூர் தர்மராஜா கோவில் தெருவை சேர்ந்தவர் மகேஷ் (வயது 22), தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று காலை நண்பரின் திருமணத்திற்கு செல்ல இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். மாங்காட்டில் மழை நீர் செல்ல சாலையின் இருபுறமும் பள்ளம் தோண்டப்பட்டு கால்வாய் அமைக்கும் பணி நடைபெறுகிறது. நிலை தடுமாறிய மகேஷ் இரு சக்கர வாகனத்துடன் அந்த கால்வாயில் விழுந்தார். இதில் குடிநீர் செல்லும் குழாய் உடைந்து அந்த பள்ளத்தில் தண்ணீர் கொட்டியது. 

அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து விட்டு வலியால் துடித்துக்கொண்டு இருந்த மகேஷை மீட்டு மாங்காட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விரைந்து முடிக்க வேண்டும்

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில்:–

 மழைக்காலங்களில் மாங்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மழைநீர் அதிகம் தேங்குவதால் அதனை வெளியேற்றுவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே நெடுஞ்சாலை துறை சார்பில் தற்போது இந்த சாலையில் ஒரே நேரத்தில் 3 இடங்களில் சாலையின் இரு புறங்களிலும் பள்ளம் தோண்டப்பட்டு கால்வாய் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. மேலும் இதற்காக தடுப்புகள் மற்றும் அறிவிப்பு பலகைகள் எதுவும் இல்லாமல் பணி நடைபெற்று வருவதால் விபத்து ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி ஒரே நேரத்தில் சாலையின் 2 பகுதிகளிலும் பள்ளம் தோண்டி இருப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

 தற்போது விழுந்த நபர் கூட குடிநீர் குழாயின் மீது விழுந்து அதன் பிறகு பள்ளத்தில் விழுந்ததால் கம்பிகள் உடலில் குத்தாமல் தப்பித்தார். இல்லை என்றால் பெரிய விபரீதம் நடந்து இருக்கும் எனவே இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் அதற்கு முன்பு அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story