ஓடும் ரெயிலில், மயக்க மருந்து கலந்த சூப்பை கொடுத்து வயதான தம்பதிகளை குறிவைத்து கொள்ளையடித்த 2 பேர் கைது


ஓடும் ரெயிலில், மயக்க மருந்து கலந்த சூப்பை கொடுத்து வயதான தம்பதிகளை குறிவைத்து கொள்ளையடித்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 13 Sept 2018 3:30 AM IST (Updated: 13 Sept 2018 1:58 AM IST)
t-max-icont-min-icon

ஓடும் ரெயிலில் மயக்க மருந்து கலந்த சூப்பை கொடுத்து வயதான தம்பதிகளை குறிவைத்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த 2 பேர் மேற்கு வங்க மாநிலத்தில் சிக்கினர்.

மும்பை, 

ஓடும் ரெயிலில் மயக்க மருந்து கலந்த சூப்பை கொடுத்து வயதான தம்பதிகளை குறிவைத்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த 2 பேர் மேற்கு வங்க மாநிலத்தில் சிக்கினர்.

வயதான தம்பதி

தானேயை சேர்ந்தவர் சஞ்சீவா ஷெட்டி(வயது61). இவர் கடந்த மாதம் 9-ந்தேதி தனது மனைவி ரத்னா(56) உடன், உடுப்பியில் இருந்து மும்பைக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார். அதே ரெயிலில் இவர்களது இருக்கைக்கு அருகே 2 பேர் அமர்ந்து இருந்தனர்.

இந்தநிலையில் சஞ்சீவா ஷெட்டியுடன் அந்த 2 பேரும் பேசி பழக்கம் ஏற்படுத்தி கொண்டனர். பின்னர் அவர்கள் தாங்கள் வைத்திருந்த மயக்க மருந்து கலந்த சூப்பை சஞ்சீவா ஷெட்டி மற்றும் அவரது மனைவிக்கு குடிக்க கொடுத்தனர்.

இதனை வாங்கி குடித்த தம்பதி சிறிது நேரத்தில் மயங்கி சரிந்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய 2 பேரும் அவர்கள் அணிந்திருந்த நகைகள் மற்றும் பணம், உடமைகளை கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்றனர்.

போலீசில் புகார்

இந்தநிலையில் மயக்கம் தெளிந்து எழுந்த தம்பதி தங்களது உடைமைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதன் பின்னர் தான் அவர்களுக்கு தங்கள் அருகே அமர்ந்திருந்த 2 பேரும் மயக்க மருந்து கலந்த சூப்பை தங்களுக்கு கொடுத்து கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இது தொடர்பாக அவர்கள் ரெயில்வே போலீசில் சம்பவத்தை கூறி புகார் அளித்தனர். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

2 பேர் கைது

சம்பவத்தன்று அந்த ரெயில் பெட்டியில் இருந்து 2 ஆசாமிகள் ரத்னகிரி ரெயில் நிலையத்தில் இறங்கி சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவர்களின் டிக்கெட் விவரங்களை பரிசோதித்ததில் ரெயிலில் பயணம் செய்த 2 பேரும் வங்கதேசத்தை சேர்ந்த ஹசேன், சாபி ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் மேற்கு வங்காள மாநிலத்தில் பதுங்கி இருந்த 2 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் தான் தம்பதியிடம் கொள்ளை அடித்தது தெரியவந்தது.

மேலும் இவர்கள் இதே பாணியில் வயதான தம்பதிகளை குறிவைத்து கொள்ளை அடித்து வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை மும்பை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story