பள்ளி குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டும் வாகன டிரைவர்களுக்கு கலெக்டர் அறிவுரை
பள்ளி குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டும் என்று பள்ளி வாகன டிரைவர்களுக்கு கலெக்டர் சுப்பிரமணியன் அறிவுரை கூறினார்.
விழுப்புரம்,
விழுப்புரம் வட்டார போக்குவரத்து துறையும், மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கமும் இணைந்து பள்ளி வாகன டிரைவர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாமை விழுப்புரத்தில் நடத்தியது. முகாமை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
விழுப்புரம் மாவட்டம் அதிகதூரம் மாநில நெடுஞ்சாலையையும், தேசிய நெடுஞ்சாலையையும் கொண்ட மாவட்டமாகும். பல்வேறு பகுதிகளில் இருந்து வரக்கூடிய வாகன டிரைவர்கள், விழுப்புரம் மாவட்ட எல்லைப்பகுதிகளான உளுந்தூர்பேட்டை- திண்டிவனத்திற்கு இடைப்பட்ட பகுதிகளில் வரும்போது சோர்வடையும் சூழல் ஏற்படுகிறது. இதனால் சில சமயங்களில் விபத்துகள் ஏற்பட்டு விலைமதிப்பற்ற உயிர்கள் போகிறது. அவ்வாறு உயிர் போனால் அந்த குடும்பமே நிர்கதியாகிவிடும்.
உயிரிழப்புகள் குறைப்பு
எனவே விபத்துகளை தடுக்க வாகன ஓட்டிகள் சாலை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். நமது மாவட்டத்தில் விபத்துகளை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டதன் விளைவாக சாலை விபத்துகள் குறைக்கப்பட்டு உயிரிழப்புகளும் தவிர்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2016-ல் 915 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டில் 834 ஆக உயிரிழப்புகள் குறைந்துள்ளது. நடப்பாண்டில் கடந்த 6 மாதங்களில் 272 ஆக உயிரிழப்புகள் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இதே 6 மாத காலத்தில் 445 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இந்த ஆண்டு 173 உயிர்களை காப்பாற்றியிருக்கிறோம்.
எனவே வாகன ஓட்டிகள் அனைவரும் சாலை விபத்துகளை தடுக்க போக்குவரத்து விதிகளை கடைபிடித்து செல்ல வேண்டும். குறிப்பாக பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்லும் வாகன டிரைவர்கள் அந்த குழந்தைகள் எதிர்கால சந்ததியினர் என்று கருதி மிகவும் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
300-க்கும் மேற்பட்டோர்...
முகாமில் வட்டார போக்குவரத்து அலுவலர் பாலகுருநாதன், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்க திட்ட மேலாளர் ரவிச்சந்திரன், சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் சுந்தர்ராஜன், துணை இயக்குனர் பாலுசாமி, அரசு போக்குவரத்துக்கழக துணை மேலாளர் நாசர், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிவக்குமார், பிரான்சிஸ், கவிதா, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்பாண்டைராஜ், சப்-இன்ஸ்பெக்டர் வசந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த முகாமில் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கண் டாக்டர்கள் கலந்துகொண்டு பள்ளி வாகன டிரைவர்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்து உரிய ஆலோசனை வழங்கினர். இதில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
Related Tags :
Next Story