திருப்பூர் மாவட்டத்தில் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்ய சப்-கலெக்டர்கள் நியமனம்


திருப்பூர் மாவட்டத்தில் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்ய சப்-கலெக்டர்கள் நியமனம்
x
தினத்தந்தி 12 Sep 2018 8:51 PM GMT (Updated: 12 Sep 2018 8:51 PM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்வதற்காக சப்-கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர்,

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் தனி அதிகாரியின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன. பல ஊராட்சிகளில் அடிப்படை வசதி இல்லாததால் கிராமப்புற மக்கள் பரிதவித்து வருகின்றனர். இதனால் குடிநீர் வினியோகம் தெருவிளக்கு, சுகாதாரம், கிராம இணைப்பு ரோடு பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி 2 அல்லது 3 ஒன்றியத்துக்கு ஒரு அதிகாரி வீதம் ஆய்வு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி திருப்பூர் சப்-கலெக்டர் ஷ்ரவன்குமார் திருப்பூர் மற்றும் பொங்கலூர் பகுதிகளுக்கும், சப்-கலெக்டர் கிரேஷ் பச்சாவு தாராபுரம் மற்றும் மூலனூர் பகுதிகளுக்கும், ஆர்.டி.ஓ. அசோகன் உடுமலை மற்றும் குடிமங்கலம் பகுதிக்கும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி காங்கேயம் மற்றும் வெள்ளகோவில் பகுதிகளுக்கும், தனித்துணை கலெக்டர் ராகவேந்திரன் பல்லடம் பகுதிக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அறிக்கையும் சமர்ப்பிக்கப்படும்

இதுபோல, அவினாசி பகுதிக்கு உதவி ஆணையர்(கலால்) சக்திவேல், மடத்துக்குளம் பகுதிக்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலஅதிகாரி சாந்தாதேவி, குண்டடம் பகுதிக்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரி முருகன், ஊத்துக்குளி பகுதிக்கு மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர்(நிலம்) ரவி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

கிராமப்புற மக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய வேண்டிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை சில நடவடிக்கை எடுத்துள்ளது. தேவையான அடிப்படை வசதிகளை கண்டறியவும், பணிகளை விரைந்து முடிக்கவும் ஏதுவாக வருவாய்த்துறை அலுவலர்கள், ஆய்வு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் தொடர் ஆய்வுகள் நடத்தி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கலெக்டருக்கு அறிக்கையும் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story