குட்கா சோதனையின் உண்மை நிலையை மத்திய அரசு வெளிப்படுத்த வேண்டும் திருப்பூரில் ஜி.கே.வாசன் பேட்டி


குட்கா சோதனையின் உண்மை நிலையை மத்திய அரசு வெளிப்படுத்த வேண்டும் திருப்பூரில் ஜி.கே.வாசன் பேட்டி
x
தினத்தந்தி 13 Sept 2018 4:00 AM IST (Updated: 13 Sept 2018 2:27 AM IST)
t-max-icont-min-icon

குட்கா சோதனையின் உண்மை நிலையை மத்திய அரசு வெளிப்படுத்த வேண்டும் என திருப்பூரில் த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த ராவுத்தம்பாளையத்தை சேர்ந்த தருண். இவர் ஆசிய விளையாட்டு போட்டியில் 2 வெள்ளி பதக்கங்கள் வென்றார். இதையத்து அவருக்கு த.மா.கா. சார்பில் பாராட்டு விழா திருப்பூர் லட்சுமிநகரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. விழாவில் தருணுக்கு, த.மா.கா. மாவட்ட கமிட்டி சார்பில் ரூ.50 ஆயிரமும், கேடயத்தையும் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வழங்கினார்.

விழாவில் த.மா.கா. மாநில பொதுச்செயலாளர் மோகன் கார்த்திக், மாநில செயலாளர் சேதுபதி, மாநகர் மாவட்ட தலைவர் ரவிக்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் முத்துராமலிங்கம், பொறுப்பாளர் ஈரோடு சந்திரசேகர், மாநில துணைத்தலைவர் ஆறுமுகம், மாநில பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான விடியல் சேகர், மாநில இளைஞரணி துணைத்தலைவர் அபிராமி செந்தில்குமார் மற்றும் த.மா.கா. நிர்வாகிகள், தருணின் குடும்பத்தினர் பலர் கலந்துகொண்டனர்.

குட்கா சோதனை

முன்னதாக ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தருணுக்கு விளையாட்டு பயிற்சி பெற மத்திய, மாநில அரசுகள் பொருளாதார சூழலை வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்தும், மாநில அரசு கலால் வரியை குறைக்க வேண்டும் என வலியுறுத்தியும், 14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சென்னையில் துறைமுகத்திற்கு எதிரில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்தது தொடர்பாக நடைபெறும் சி.பி.ஐ. சோதனையில் ஒரு காலக்கெடுவுக்குள் உண்மை வெளிவர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஏற்கனவே தமிழகத்தில் பல்வேறு காரணங்களுக்காக சோதனைகள் நடந்து முடிந்திருக்கிறது. ஆனால் அதனுடைய தொடர்ச்சி என்ன என்பது இன்று வரை கேள்விக்குறியாக உள்ளது. தற்போது நடந்து வரும் குட்கா சோதனையின் உண்மை நிலையை சி.பி.ஐ.யும், மத்திய அரசும் வெளிப்படுத்த வேண்டும். தமிழக அரசும், அதன் செயல்பாடும் கேள்விக்குறியாகி வருகிறது.

6 வழிச்சாலை

தமிழக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருப்பதை மக்கள் கவனித்து கொண்டிருக்கிறார்கள். விநாயகர் சிலைகள் வைக்க அதிக கட்டுப்பாடுகள் விதிக்க கூடாது. 8 வழிச்சாலைக்கு பதிலாக 6 வழிச்சாலையாக மாற்றுவதற்கு நெடுஞ்சாலை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. 6 வழிச்சாலையின் சாதகம் மற்றும் பாதகத்தை அரசு மக்களிடம் எடுத்து கூற வேண்டும். இதனால் விவசாயிகளுக்கு நன்மை ஏற்படுமா?, விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்குமா?, மக்கள் பாதிக்கப்படுவார்களா? என்பது குறித்து அரசு ஆராய்ந்து செயல்பட வேண்டும். திட்டத்தை அறிவித்துட்டோம் என மக்கள் மீது திணிக்க கூடாது.

தமிழக அரசும், போலீசாரும் தமிழகத்தில் நடக்கும் குற்றச்செயல்களை தடுக்க தனி கவனம் செலுத்த வேண்டும். தவறு செய்கிறவர்கள் பாரபட்சமின்றி கடுமையான முறையில் தண்டிக்கப்பட வேண்டும். திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். திருப்பூரில் போக்குவரத்து நெருக்கடியை சரிசெய்ய வேண்டும். பின்னலாடை தொழிலாளர்களுக்கு சொந்தமாக குடியிருப்புகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். தமிழகத்தில் மின்சாரம் தடையில்லாமல் கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story