குன்னூர் அருகே நடுரோட்டில் காட்டெருமைகள் சண்டை வாகன ஓட்டிகள் பீதி


குன்னூர் அருகே நடுரோட்டில் காட்டெருமைகள் சண்டை வாகன ஓட்டிகள் பீதி
x
தினத்தந்தி 12 Sep 2018 9:30 PM GMT (Updated: 12 Sep 2018 9:30 PM GMT)

குன்னூர் அருகே நடுரோட்டில் காட்டெருமை கள் சண்டையிட்டன. இதனால் வாகன ஓட்டிகள் பீதி அடைந் தனர்.

குன்னூர்,

குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. குறிப்பாக காட்டெருமை, கரடி போன்றவை பகல் நேரத்திலும் குடியிருப்பு பகுதிகளில் உலா வருகின்றன.

இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு பீதியுடன் வெளியே சென்று வர வேண்டிய நிலை காணப்படுகிறது. எனவே குடியிருப்பு பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று வனத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் குன்னூர்- கரன்சி சாலையில் லாம்ஸ்ராக் அருகே 2 காட்டெருமைகள் உலா வந்தன. அப்போது திடீரென அவை ஆக்ரோஷமாக சண்டையிட்டு கொண்டன.

போக்குவரத்து பாதிப்பு

இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் பீதி அடைந்து ஆங்காங்கே தங்களது வாகனங்களை நிறுத்தினர். காட்டெருமைகள் சாலையில் இருந்து விலகி செல்லும் வரை அவர்கள் காத்திருந்தனர். சுமார் 20 நிமிடங்கள் சண்டையிட்டு கொண்ட காட்டெருமைகள், அதன்பிறகு அருகிலுள்ள தேயிலை தோட்டத்துக்குள் சென்றன. இதையடுத்து அந்த வழியே மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, இந்த சாலையில் அடிக்கடி காட்டெருமைகள் உலா வருகின்றன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் பீதியுடன் செல்லும் நிலை காணப்படுகிறது.

எனவே பகல் நேரத்தில் சாலையில் உலா வரும் காட்டெருமைகளை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். நடுரோட்டில் காட்டெருமைகள் சண்டையிட்டு கொண்டதால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Next Story