சீமை கருவேல மரங்களை ஏலம் விட எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
விளாத்திகுளம் அருகே சீமை கருவேல மரங்களை ஏலம் விட எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
விளாத்திகுளம்,
விளாத்திகுளம் அருகே சீமை கருவேல மரங்களை ஏலம் விட எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
சீமை கருவேல மரங்கள் ஏலம்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே அயன் செங்கல்படை கண்மாய் உள்ளது. சுமார் 240 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாயில் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. கடந்த 2011-ம் ஆண்டு இந்த கண்மாயில் உள்ள சீமை கருவேல மரங்களை விளாத்திகுளம் யூனியன் சார்பில், ரூ.33 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.
பின்னர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அயன் செங்கல்படை கண்மாயில் உள்ள சீமை கருவேல மரங்களை ரூ.1 லட்சத்துக்கு குறைவாக ஏலம் விடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், அந்த ஏலம் ரத்து செய்யப்பட்டது.
பஞ்சாயத்து அலுவலகம் முற்றுகை
இந்த நிலையில் அயன் செங்கல்படை கண்மாயில் உள்ள சீமை கருவேல மரங்களை நேற்று காலையில் ஏலம் விட யூனியன் அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். இதுகுறித்து அயன் செங்கல்படை பஞ்சாயத்து அலுவலக தகவல் பலகையில் நேற்று முன்தினம் மாலையில் அறிவிப்பு ஒட்டப்பட்டது.
இதற்கிடையே சீமை கருவேல மரங்களை ஏலம் விடுவது குறித்து 15 நாட்களுக்கு முன்பாக விளம்பரம் செய்ய வேண்டும். தனிநபருக்கு ஆதரவாக ஏலம் விடக்கூடாது என்று வலியுறுத்தி, நேற்று காலையில் அப்பகுதி மக்கள் அயன் செங்கல்படை பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
முற்றுகையிட்டவர்களிடம் விளாத்திகுளம் யூனியன் ஆணையாளர் அரவிந்தன், போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், பஞ்சவர்ணம் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து நேற்று நடைபெற இருந்த ஏலத்தை ரத்து செய்வதாகவும், மற்றொரு நாளில் ஏலம் விடுவதற்கு 15 நாட்களுக்கு முன்பாக விளம்பரம் செய்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story