அதிகரிக்கப்பட்ட லாரி அச்சுகளின் எடையை பதிவு செய்வது கட்டாயம் வட்டார போக்குவரத்து அலுவலர் உத்தரவு
அதிகரிக்கப்பட்ட லாரி அச்சுகளின் எடையை கட்டாயம் பதிவு செய்து வரி செலுத்துமாறு வட்டார போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல்,
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட கனரக லாரிகளில் குறைந்தபட்சம் 10 டன் முதல் அதிகபட்சம் 40 டன் அளவுள்ள சரக்குகளை ஏற்றும் வகையிலேயே அச்சுகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. இருப்பினும், அவற்றில் அளவுக்கு அதிகமாக சரக்குகளை ஏற்றி செல்வதால் விபத்துகள் ஏற்பட்டு வந்தது. இதனை கட்டுப்படுத்துவதற்காக அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகின்றனர்.
இந்தநிலையில், தற்போது தயாரிக்கப்பட்டுள்ள கனரக லாரிகளில் குறைந்தபட்சம் 18 டன் முதல் அதிகபட்சமாக 55 டன் வரை சரக்குகளை ஏற்றும் வகையில் அச்சுகள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே, அதிகரிக்கப்பட்டுள்ள அச்சு எடையின் அளவுகளை அந்தந்த லாரி உரிமையாளர்கள் பதிவு சான்றிதழ் மற்றும் அனுமதிச்சீட்டில் கட்டாயம் பதிவு செய்யுமாறு மாநில போக்குவரத்து ஆணையர் அறிவுறுத்தி உள்ளார்.
வித்தியாச வரி
இதுதொடர்பாக அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கும் அவர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இதுகுறித்து, திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
வருகிற 30-ந்தேதியுடன் முடிவடையும் காலாண்டுக்கான, அச்சு எடை வரிகளை லாரி உரிமையாளர்கள் ஏற்கனவே செலுத்திவிட்டனர். தற்போது, அதிகரிக்கப்பட்ட அச்சு எடையை அனைத்து லாரி உரிமையாளர்களும் பதிவு சான்றிதழ் மற்றும் அனுமதிச்சீட்டில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
இதற்காக, அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து உரிய கட்டணத்தை செலுத்த வேண்டும். மேலும், பழைய எடை அளவுக்கும், புதிய எடை அளவுக்குமான வித்தியாச வரியையும் வருகிற 30-ந்தேதிக்குள் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story