தோட்டக்கலை பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் மானியம் கலெக்டர் கணேஷ் தகவல்


தோட்டக்கலை பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் மானியம் கலெக்டர் கணேஷ் தகவல்
x
தினத்தந்தி 12 Sep 2018 9:45 PM GMT (Updated: 12 Sep 2018 9:41 PM GMT)

தோட்டக்கலை பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது என கலெக்டர் கணேஷ் தெரிவித்து உள்ளார்.

புதுக்கோட்டை, 


தோட்டக்கலைத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் கணேஷ் பார்வையிட்டார். இதில் திருவரங்குளம் வட்டாரம் பாலையூரில் மானாவாரி பகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.22 ஆயிரத்து 500 மானியத்தில் பயிரிடப்பட்டு உள்ள மா கன்றுகள், தெட்சிணாபுரத்தில் பிரதம மந்திரி சொட்டுநீர் பாசன இயக்க திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 46 ஆயிரம் மானியத்தில் பயிரிடப்பட்டு உள்ள காய்கறி செடிகள், ரூ.38 ஆயிரம் மானியத்தில் முந்திரி தோட்டத்தில் சொட்டு நீர் பாசன மூலம் செண்டு பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளதை பார்வையிட்டார்.

தொடர்ந்து நம்புகுளியில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் மானியத்தில் அமைக்கப்பட்டு உள்ள சிப்பம் கட்டும் அறையையும், ரூ.12 லட்சத்து 66 ஆயிரம் மற்றும் ரூ.4 லட்சம் 67 ஆயிரம் மானியத்தில் அமைக்கப்பட்டு உள்ள பசுமைகுடில் வெள்ளரி சாகுபடி, பெருமாநாட்டில் இயற்கை முறையில் பயிரிடப்பட்டுள்ள கீரைகளையும் பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “விவசாயிகள், அதிக லாபம் கிடைக்கக்கூடிய பயிர்கள் குறித்து விவசாய அதிகாரிகளை அணுகி தெரிந்து கொண்டு சாகுபடி மேற்கொள்ள வேண்டும். மானாவாரி வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தோட்டக்கலை பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.

எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்” என்றார். அவருடன் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அருணாசலம், உதவி இயக்குனர் குருமணி மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர். 

Next Story