மாவட்ட செய்திகள்

தமிழகம் முழுவதும்பஞ்சமி நில ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி அகற்றப்படும்தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் தகவல் + "||" + National Scheduled Castes Vice President of the Commission

தமிழகம் முழுவதும்பஞ்சமி நில ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி அகற்றப்படும்தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் தகவல்

தமிழகம் முழுவதும்பஞ்சமி நில ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி அகற்றப்படும்தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் தகவல்
‘தமிழகம் முழுவதும் பஞ்சமி நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி அகற்றப்படும்‘ என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்தலைவர் முருகன் தெரிவித்தார்.
தேனி,

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்தலைவர் முருகன் தேனிக்கு நேற்று வந்தார். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து அரசுத்துறை அதிகாரிகளுடன் அவர் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் ஒவ்வொரு துறையின் வாரியாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நலத்திட்டங்கள், செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அவர் ஆய்வு செய்தார். ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளின் செயல்பாடு, மாணவர்கள் தேர்ச்சி விகிதம், விடுதிகளின் செயல்பாடுகள் குறித்து புள்ளி விவரங்களை கேட்டறிந்தார்.

உடனடி நிவாரணம்

போலீஸ் துறை சார்பில் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் தற்போதைய நிலவரம், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளதா? அதில் உள்ள கால தாமதத்துக்கான காரணங்கள் குறித்து கேட்டறிந்து, அறிவுரைகள் வழங்கினார்.

அப்போது பாலியல் பலாத்கார வழக்கு ஒன்றில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முதற்கட்ட நிவாரண தொகை கூட வழங்கப்படாததை அறிந்து அதுகுறித்து ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர்களிடம் விளக்கம் கேட்டார். பின்னர், பாலியல் பலாத்காரம், கொலை வழக்குகளில் தாமதமின்றி விரைவாக முதற்கட்ட நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், தற்போது சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறும் உத்தரவிட்டார்.

கோரிக்கை மனுக்கள்

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கான நிவாரணத் தொகை வழங்குவதற்கான உத்தரவு தயார் செய்யப்பட்டது. கூட்டம் நடந்து கொண்டு இருக்கும் போதே அந்த பெண்ணுக்கு நிவாரண தொகை பெறுவதற்கான உத்தரவை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவர் வழங்கினார்.

பின்னர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். இந்த மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி மற்றும் அரசின் பல்வேறு துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை

கூட்டத்தை தொடர்ந்து ஆணையத்தின் துணை தலைவர் முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் சார்பில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்பட நாடு முழுவதும் மாவட்டம் வாரியாக ஆய்வுக்கூட்டங்கள் நடத்தி வருகிறோம். இதுவரை 174 மாவட்டங்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

தேனி மாவட்டத்தில் 2 ஆதிதிராவிடர் நலத்துறை அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் குன்னூரில் உள்ள பள்ளி பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. டி.பொம்மிநாயக்கன்பட்டியில் உள்ள பள்ளியில் 78 சதவீதம் மாணவ, மாணவிகளே தேர்ச்சி பெற்றுள்ளனர். அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளேன்.

மாவட்டத்தில் 13 ஆயிரத்து 500 பேருக்கு பட்டா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 1,701 ஆதிதிராவிடர் மக்களுக்கும், 84 பழங்குடியின மக்களுக்கும் பட்டா வழங்கப்பட்டுள்ளது. தாட்கோவில் 442 விண்ணப்பங்கள் வாங்கியதில், 418 பேருக்கு 30 சதவீத மானியத்தில் வங்கிக்கடன் வழங்கப்பட்டு உள்ளது.

பஞ்சமி நில ஆக்கிரமிப்பு

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தண்டனை பெற்ற வழக்குகள் மிகவும் குறைவாக உள்ளன. கடந்த காலங்களில் மொத்தம் 313 வழக்குகளில் 3 வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. 66 வழக்குகளில் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். அந்த வழக்குகளிலும் ஏன் விடுவிக்கப்பட்டனர் என்பதை ஆய்வு செய்ய தனி குழு அமைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

பஞ்சமி நிலம் சம்பந்தமாக மாவட்டத்தில் 3 ஆயிரத்து 515 ஏக்கர் நிலங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் எவ்வளவு ஆக்கிரமிப்பு உள்ளது என்பது குறித்த விரிவான ஆய்வு நடந்து வருகிறது. ஊஞ்சாம்பட்டியில் 79 சென்ட் பரப்பளவில் பஞ்சமி நிலத்தில் ஒரு தொழிற்சாலை செயல்படுவதாக தெரியவந்துள்ளது. அதுகுறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதுமே பஞ்சமி நிலங்களில் ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி அகற்றப்படும்.

தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு ரூ.1 கோடி வரை கடன் வழங்கும் ‘ஸ்டாண்ட் அப் இந்தியா’ திட்டத்தில் வங்கி நிர்வாகம் சிறப்பாக செயல்படவில்லை. இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.