மாணவர்களின் கற்றல் அடைவு திறன் குறித்து தலைமை ஆசிரியர்களுடன் ஆய்வு கூட்டம்


மாணவர்களின் கற்றல் அடைவு திறன் குறித்து தலைமை ஆசிரியர்களுடன் ஆய்வு கூட்டம்
x
தினத்தந்தி 12 Sep 2018 10:19 PM GMT (Updated: 12 Sep 2018 10:19 PM GMT)

கரூர் மாவட்டத்தில் மாணவர்களின் கற்றல் அடைவு திறன் மேம்பட்டுள்ளதா? என்பது குறித்து தலைமை ஆசிரியர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது.

கரூர், 


கரூர் மாவட்டத்தில் அனைத்து வகையான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் அடைவு திறன் குறித்து ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் மூலமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக அனைத்து ஒன்றியங்களிலும் வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் கொண்ட குழுக்கள் மூலம் கரூர் மாவட்டத்தில் 36 நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடனான ஆய்வு கூட்டம், மாயனூரில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அனந்தநாராயணன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் மாணவர்களின் தமிழ், ஆங்கில மொழிகளை வாசிக்கும் திறன், எழுதும் திறன் மற்றும் அடிப்படை கணித செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடத்தப்பட்ட அடைவு தேர்வின் முடிவுகளிலிருந்து தற்போது நடத்தப்பட்ட ஆய்வில் மாணவர் களின் கற்றல் அடைவு மேம்பட்டுள்ளதா? என்பது குறித்தும் கல்வி அதிகாரிகள் கேட்டறிந்தனர். 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் படைப்பாற்றல் கல்வி முறையில் பாடம் கற்பிக்கும் வழிமுறைகள் குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இந்த கூட்டத்தில், மாவட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதல்வர் ரவிக்குமார், மாவட்ட கல்வி அதிகாரிகள் கபீர், கனகராஜூ, உதவிதிட்ட அதிகாரி ரவிசந்தர், மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பக்தவச்சலம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story