தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.2.16 கோடி செலவில் பனித்துளி தெளிப்பான் கருவி
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.2.16 கோடி செலவில் பனித்துளி தெளிப்பான் கருவி அமைக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.2.16 கோடி செலவில் பனித்துளி தெளிப்பான் கருவி அமைக்கப்பட்டு உள்ளது.
பனி தெளிப்பான்
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் வாகன அமைப்புடன் கூடிய பனித்துளி தெளிப்பான் கருவி ரூ.2 கோடியே 16 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தெளிப்பான், துறைமுகத்தின் நிலக்கரி சேமிப்பு கிடங்கில் லாரிகளில் இருந்து இறக்கும்போதும், ஏற்றும் போதும் ஏற்படும் தூசியை கட்டுப்படுத்தும். சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு பனித்துளியை பீய்ச்சி அடிக்கும். இறக்குமதி மற்றும் ஏற்றுமதியின் போது ஏற்படும் தூசியை கட்டுபடுத்துவதற்காக சுமார் 100 மீட்டர் தொலைவிற்கு பனித்துளியினை பீச்சியடிக்க கூடிய திறன் கொண்ட இவ்வகை தெளிப்பான் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் சிறப்பம்சமாக தூசி ஏற்படுவதற்கு முன்பாகவே பனித்துளியை தெளித்து தூசி ஏற்படாமல் கட்டுப்படுத்த முடியும்.
கண்காணிப்பு நிலையம்
மேலும் சுற்றுப்புற காற்றின் தரத்தை கண்காணிக்கவும், பயனுள்ள முறையில் கட்டுப்படுத்தவும் ரூ.3 கோடியே 46 லட்சம் செலவில் கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையங்கள் எண்ணெய்தளம், துறைமுக அலுவலர் குடியிருப்பு, முயல்தீவு ஆகிய 2 இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கண்காணிப்பு நிலையங்கள் மூலம் நுண்துகள்கள், நைட்ரஜன், கார்பன்மோனாக்சைடு, கந்தக டை ஆக்சைடு உள்ளிட்டவைகளின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு துறைமுக நிர்வாக அலுவலகத்தில் உள்ள மத்திய காற்று தரக்கண்காணிப்பு அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த தகவல்கள் தானியங்கியாகவே ஒவ்வொரு மணி நேர இடைவெளியில் சேகரிக்கப்பட்டு, தினமும் சராசரி அளவு துறைமுக முதல் நுழைவு வாயில், பச்சை நுழைவு வாயில், சிவப்பு நுழைவு வாயில், துறைமுக அலுவலக நிர்வாக கட்டிடம் ஆகிய 4 இடங்களில் உள்ள திரைகளில் காண்பிக்கப்படுகிறது. இந்த தகவல்கள் தமிழ்நாடு மாசுக்கட்டு பாட்டு வாரியம், மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் மற்றும் துறைமுக இணையதளத்திலும் விரைவில் வெளியிடப்பட உள்ளது.
தொடக்க விழா
இந்த பனி தெளிப்பான் மற்றும் காற்று தர கண்காணிப்பு நிலையம் திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ரிங்கேஷ்ராய் தலைமை தாங்கி, பனித்துளி தெளிப்பானை தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் வையாபுரி சுற்றுப்புற கண்காணிப்பு நிலையத்தை திறந்து வைத்தார். சிறப்பு அதிகாரி விஷ்ணு முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் வ.உ.சி. துறைமுக தலைமை எந்திர என்ஜினீயர் சுரேஷ்பாபு, போக்குவரத்து மேலாளர் ராஜேன்ந்திரன், தலைமை கணக்கு அதிகாரி மற்றும் ஆலோசகர் சாந்தி, துணை பாதுகாப்பு அதிகாரி கேப்டன் பாபடோஸ் சந்த், செயலாளர் ஈசுராய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story