நெல்லை சந்திப்பில் பரபரப்பு: மதுவில் விஷம் கலந்து குடித்து பஸ் நிறுவன மேலாளர் தற்கொலை
நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு விடுதியில் மதுவில் விஷம் கலந்து குடித்து பஸ் நிறுவன மேலாளர் தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை,
நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு விடுதியில் மதுவில் விஷம் கலந்து குடித்து பஸ் நிறுவன மேலாளர் தற்கொலை செய்து கொண்டார். அவரது பிணத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பஸ் நிறுவன மேலாளர்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள குமாரபாளையத்தை சேர்ந்தவர் இளங்கோ (வயது 49). இவர் நெல்லையில் உள்ள ஒரு தனியார் பஸ் நிறுவன கிளையில் மேலாளராக பணியாற்றி வந்தார். இளங்கோ நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார்.
அந்த அறையை அலுவலகம் போல் செயல்படுத்தி வந்தார். வாரத்தில் ஒரு நாள் அவர் தனது சொந்த ஊரான குமாரபாளையத்துக்கு சென்று வருவார். அவர் வழக்கமாக காலையில் எழுத்து விடுதியை விட்டு வெளியே சென்று வருவது வழக்கம்.
ஆனால், நேற்று முன்தினம் மதியம் வரை அவரது அறை திறக்கப்படவில்லை. பணிக்கு செல்லும் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் இளங்கோவை பார்க்க வந்தனர். அப்போது அறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. டிரைவர்கள் கதவை தட்டி பார்த்தனர். ஆனால், அவர் கதவை திறக்கவில்லை.
தற்கொலை
இதனால் சந்தேகம் அடைந்த டிரைவர்கள், விடுதி அலுவலர்களிடம் கூறினர். அவர்கள் நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இளங்கோ தங்கியிருந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
விடுதி அறைக்குள் உள்ள படுக்கையில் இளங்கோ, வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணமாக கிடந்தார். அருகில் மதுபாட்டில் கிடந்தது. எனவே, அவர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
காரணம் என்ன?
உடனே போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து இளங்கோ கடன் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். தனியார் பஸ் நிறுவன மேலாளர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story