18 முதல் 19 வயதுக்குட்பட்ட 1½ லட்சம் பேரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை


18 முதல் 19 வயதுக்குட்பட்ட 1½ லட்சம் பேரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை
x
தினத்தந்தி 12 Sep 2018 10:33 PM GMT (Updated: 12 Sep 2018 10:33 PM GMT)

வேலூர் மாவட்டத்தில் 18 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் 1½ லட்சம் பேரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர், 

இந்திய தேர்தல் ஆணையம் அடுத்த ஆண்டு (2019) ஜனவரி 1-ந் தேதியை அடிப்படையாக கொண்டு சிறப்பு சுருக்குமுறை திருத்த வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1-ந் தேதி வெளியிடப்பட்டது.

இந்த வரைவு வாக்காளர் பட்டியல் படி வேலூர் மாவட்டத்தில் 30 லட்சத்து 23 ஆயிரத்து 979 வாக்காளர்கள் உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்காக 1,681 வாக்குச்சாவடி மையங்களில் அடுத்த மாதம் (அக்டோபர்) 31-ந் தேதி வரை வைக்கப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா? என்று சரிபார்த்து வருகின்றனர்.

1½ லட்சம் பேரை சேர்க்க நடவடிக்கை

மேலும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி கடந்த 9-ந் தேதி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இந்த சிறப்பு முகாம்களில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல் ஆகிய பணிகள் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மனு கொடுத்துள்ளனர். அவர்களில் புதிதாக பெயர் சேர்க்க மட்டும் 16 ஆயிரம் பேர் மனு கொடுத்துள்ளார்கள். அதில் 14 ஆயிரம் பேர் 18 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள்.

வேலூர் மாவட்டத்தில் 18 வயது முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் 1½ லட்சம் பேர் இருப்பதாகவும், அவர்கள் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story